உங்களை நீங்களே சரிபார்க்க…
தொழிலில் ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளால்
உங்கள் உறுதியும் தடுமாறுகிறதா?
உங்களை நீங்களே சரிபார்க்க…
இதோ சில அடிப்படை அவசியங்கள்!
வார்த்தைகளில் உண்மை:
சொன்ன வார்த்தைகளுக்கு உண்மையாக இருங்கள். சொன்ன நேரத்திற்கு எதையும் முடித்துத் தருவதில் உறுதியாய் இருங்கள்.
தவிர்க்க முடியாத தாமதங்களையும் முன் கூட்டியே கணித்து, முன்னதாகவே அறிவித்து, கூடுதல் அவகாசத்தைப் பெற்றுக் கொள்ளலாம். இது எப்போதாவது தான். எப்போதும் செய்யக் கூடியதல்ல. எந்த சமயத்திலும் நீங்கள் தந்த வார்த்தையின் தரத்தை தரைமட்டமாக்காதீர்கள்.
நேர மேலாண்மை:
நீங்கள் ஒப்புக்கொண்ட சந்திப்புகளுக்குத் தாமதமாக வருவது, சந்திப்பவர்களை அவமதிப்பது. நீங்கள் ஏற்பாடு செய்த சந்திப்புக்கு தாமதமாகச் செல்வது, உங்களை மதித்து வந்தவர்களை அவமதிப்பது. ஒவ்வொரு விநாடியும் மதிப்புள்ளது என்பதை உங்கள் செயல்பாடுகள் உணர்த்தும்போது வித்தியாசத்தை நீங்களே உணர்வீர்கள்.
கணக்குகள் சமர்ப்பித்தல்:
நீங்கள் உண்மையானவர், நியாயமானவர் என்று பிறர் உங்களை போற்றக் காரணமாக இருப்பவை கணக்குகள். இனிப்பென்று நினைத்து கடித்த பழம் புளித்தால் முகம் சுளிப்பதுபோல் தவறான கணக்குகள் தருபவர்கள்மீது மற்றவர்களுக்கு மனச்சுளிப்பை ஏற்படுத்தும்.
பழகுவதற்கு எளிமையாக இருங்கள்:
உலகின் ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் தலைவர்கள் பழக எளிமையானவர்களாக இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தே அமைகின்றன என்று நிர்வாகவியல் ஆய்வுகள் சொல்கின்றன. நீங்கள் பழக எளிமையானவர்களாக இல்லையென்றால் உங்களுடன் வணிக தொடர்பு வைத்துக்கொள்ள பெரும்பாலோர் தயங்குவார்கள். உங்களுடன் பணியாற்றக்கூடிய யாவரும் தங்கள் நிலையை உங்களுடன் பகிர்ந்துகொள்ள இயலாது. இது உங்கள் நிறுவனத்தின் வளர்ச்சியை பாதிக்கும்.
கூட்டுமுயற்சி:
ஒரு நிறுவனத்தின் வெற்றி அதன் பின் இயங்குகிற ஒட்டுமொத்த குழுவை சார்ந்தே இருக்கிறது. தனி மனிதனின் திறமைகளைத் தாண்டி பிறரின் கருத்துகளுக்கு செவிசாய்த்து, மற்ற பணியாளர்களின் திறமைகளை அங்கீகரிக்கிற போது, நிறுவனத்தின் வெற்றி தானாகவே உயரும். இந்தக் கூட்டு முயற்சியின் மூலமாக சக பணியாளர்களிடையே நம்பிக்கை, பொறுமை, சிக்கல்களை எதிர்கொள்கிற விதம் என அத்தனை திறமைகளும் வளரும்.
செயலில் ஒழுக்கம்:
பலர், வேலை நேரங்களில் எந்நேரமும் வீண் பேச்சுகள் பேசி பொழுதைக் கழிப்பார்கள். அலுவலக உடைமைகளை தவறான வழியில் பயன்படுத்துவார்கள். புரளி பேசுவார்கள், உயர் அதிகாரிகளை விமர்சனம் செய்வார்கள். இது செயலொழுக்கம் இல்லாத சூழ்நிலை. இந்நிலையை மாற்ற ஒரு நிறுவனம் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
துணிவு:
வெற்றியின் அடிப்படையே உங்கள் தடைகளை தகர்த்தெறிந்து செயலில் ஈடுபடுதல்தான். பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு வித்தியாசமான அணுகுமுறை மூலம் தீர்வு காணுகிறபோது உங்கள் போட்டி நிறுவனங்களுக்கு உங்கள் மீது பயம் ஏற்படுவது நிச்சயம். நீங்கள் அசந்துவிடுகிற நொடியில் உங்கள் கண்களுக்கு எட்டாதூரம் நீங்கள் பெற்ற வெற்றியை கடந்து உங்கள் போட்டியாளர் ஓடிக்கொண்டிருப்பார்! எனவே துணிந்து செயல்படுங்கள். உங்கள் திறமைகளை உணர்ந்து செயல்படுங்கள்.
அழுத்தத்தை எதிர்கொள்ளுங்கள்:
அழுத்தம் இல்லாத எந்த துறையும், வேலையும் இன்றளவும் கண்டுபிடிக்கப்படவில்லை. உங்கள் வேலையில் அழுத்தம் இருப்பது தவிர்க்க முடியாத ஒன்று. நிலத்தில் அழுந்திப் பதிகின்ற பந்துகள் விண் நோக்கி எம்புவது போல், நீங்கள் எதிர் கொள்கிற வேலையின் அழுத்தம் உங்களை வெற்றியின் உயரத்திற்குக் கொண்டு செல்லும்.
நீங்கள் தற்பொழுது அடைந்து உள்ள நிலை மிகவும் சுகமானதாக, போதுமானதாக தோன்றும். ஆனால் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் நகர வேண்டும். தேடுதலை நிறுத்தினால் தேக்கம்தான். எனவே தொடர்ந்து செயல்படுங்கள்!
விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்
தவணை முறையில் வெற்றி காண்போம்.சரியான நேரத்தில் எதையும் நிறுத்தத் தெரிந்திருக்க வேண்டும். இது பற்றி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்கலாம்.
பல விதமான முறைகளில் – பிறப்பு முதல் இறப்பு வரை, கவலையில் இருந்து தற்கொலை வரை – சிலர் தங்கள் துன்பத்தை அதிகரித்துக் கொள்கிறார்கள். வயிறு நிறைந்தவுடன் போதும் என்று சாப்பாட்டை நிறுத்தி விட வேண்டும், இல்லையேல் வயிறு பெருத்து சீக்கிரம் இறந்து விட நேரிடும்.
இது போலவே மதுபானம், பேச்சு போன்றவற்றையும் நிறுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்.
பல உதாரணங்களைச் சொல்லலாம். இவைகள் போன்ற உடல் சம்பந்தப்பட்டவற்றை பழக்கத்தினால் நிறுத்தலாம். ஏனெனில் உங்கள் அறிவார்ந்த மனதுக்கு உடல் கட்டுப்படுகிறது. ஆகவே நிறுத்து என்றவுடன் தேவையற்றவைகளை நிறுத்த முடிகிறது.
உள்மனதில் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளை நிறுத்துவது சாத்தியமில்லை. உடல் சம்பந்தப்பட்ட விஷயங்களாக இருந்தால்கூட உணர்ச்சி மயமானதாக இருந்தால் அவற்றையும் உள்மனத்தால் கட்டுப்படுத்த முடியாது.
உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. பிரச்சினைகள் நிறைந்த இந்த உலகில் சங்கடங்களுக்கு முக்கிய காரணம் நிறுத்தத் தவறுவது தான். உணர்ச்சிமயமான பிரச்சினையைச் சமாளிக்க எப்படி நிறுத்துவது எப்பொழுது நிறுத்துவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
எதிர்மறை உணர்ச்சியை அதிகரிக்க விடாதீர்கள். குறை கூறுவதைத் தவிர்ப்பது நல்லது. குறை சொல்வதில் பயன் இல்லை. குறை சொல்லத்தான் வேண்டும் என்றால் அதிகம் உணர்ச்சி வசப்படாமல் கூறலாம். அதில் எரிச்சல், பழிவாங்குதல், வெடுவெடுப்பு, வெறுப்பு போன்ற எதுவும் தலைகாட்டாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மிருதுவாக, விசனம் இல்லாமல் நல்ல எண்ணத்தோடு நீங்கள் வழிகாட்டுவதாக உணர்த்திக் குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
அது அவர்களுக்குத் தொல்லை தரும் வரை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம்.
சிறு சண்டையே காரசாரமான விமர்சனங்களுக்கு வழி செய்கிறது. உங்கள் விமர்சனம் எதுவரை செல்லுபடியாகும் என்பதைப் புரிந்து கொண்டு அத்துடன் நிறுத்திக் கொள்ளுங்கள். விவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள். அந்தப் பேச்சை அதற்குப் பின் எடுக்காதீர்கள்.
உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டனவா? எல்லோருடைய மனதுக்கும் மூன்று விதமான ஆசைகள் உண்டு:
1) மற்றோர் மனதில் முக்கியமானவர்களாய் இருக்க வேண்டும்.
2) தம்மைப் பிறர் புகழ வேண்டும்.
3) பாராட்ட வேண்டும்.
இவைகளைப் புரிந்து கொள்ளாத சிலர் உங்களை அவமானப்படுத்தி இருக்கலாம். இதனால் உங்கள் உணர்வுகள் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இவைகளைப் பற்றிக் கவலைப்படுவதை நிறுத்துங்கள். அதை மீண்டும் மீண்டும் நினைத்துக் கவலையை அதிகரிக்காதீர்கள்.
நடந்தது நடந்து விட்டது, நிறுத்துங்கள்.
நடந்தவற்றை மாற்ற முடியாது. அதை நினைத்திருக்காதீர்கள். நிறுத்துங்கள்.
உங்களைப் போலவே மற்றவர்களுக்கும் கவலைகள் உண்டு. கவலையைப் போக்க என்ன செய்தால் என்று யோசித்தால் பலன் உண்டு, துன்பத்திலேயே தோய்ந்திருந்தால் என்ன லாபம்?
தொல்லை தரும் கவலையை, பிரச்சினைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமாகச் சிந்தியுங்கள். உங்கள் கவலைக்குக் காரணம் எதுவாக இருந்தாலும் நிறுத்திவிடுங்கள். நிறுத்துவது தொடர வேண்டும்.
எல்லோரும் எல்லோரையும் விரும்ப முடியாது. உங்களுக்கு சிலரைப் பிடிக்காமல் இருக்கலாம். அத்தோடு நிறுத்தி விடுங்கள்.
“எனக்குப் பிடிக்காதவரைப் பற்றி நான் நினைப்பதே இல்லை“ என்று ஐசன் ஹோவர் கூறினார்.
அந்த எண்ணங்கள் வந்தவுடன், அவனை/அவளை எனக்குப் பிடிக்காது. நிறுத்தவும். அவ்வளவு தான். அதன் பிறகு மனதில் வேறு எண்ணங்களைச் செலுத்தவும்.
யாருக்குத் தான் தொல்லைகள் இல்லை? அவைகளோடு கவலைகளைச் சேர்த்து துன்பம், பயம் என்று அதிகரித்துக் கொண்டே செல்வானேன்?
எதிர்மறை உணர்வுகளை அதிகரிக்காதீர்கள். முடியுமானால் தீர்வு காணுங்கள், இல்லையேல் நிறுத்தி விடுங்கள்.
விதி ஒரு கதவை மூடினால் நம்பிக்கை மற்றொரு கதவைத் திறக்கிறது. அதை நம்பலாம். நிறுத்தவும்.
மகத்தான நதி போல் செயற்படுங்கள்...!
மகத்தான நதி தன்னுடைய புகலிடம் நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறது. அது அங்கு நிச்சயம் சென்றடையும். அது தன் வழியை வகுத்துக் கொண்டுவிட்டது.
நீங்களும் அது போல் செயற்படுங்கள்.
நீங்கள் போய் சேர வேண்டுய இடம் உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைக் குறிக்கோளை அடைய ஒரு வழியும் உங்களுக்குப் புலப்பட வேண்டும்.
மகத்தான நதியைப் போல் அந்த வழியிலேயே உங்கள் பயணம் முன்னேறட்டும்.
வெள்ளம் வந்து நதியின் போக்கை இலேசாக மாற்றலாம். ஆனால் வெள்ளம் வடிந்த பின்னர் நதி தன் வழியாகவே செல்லும். அது தன் இலக்கை நோக்கி ஓடிய வண்ணமே இருக்கும்.
நீங்களும் அவ்வாறே செயல்படுங்கள்.
உங்கள் வழியிலும் பல பிரச்சினைகள் தோன்றலாம். மகத்தான நதியைப் போல் மீண்டும் உங்கள் வெற்றிப் பாதைக்கு வந்து சேருங்கள். உங்கள் குறிக்கோளை நோக்கி நகர்ந்த வண்ணம் இருங்கள்.
நதியின் ஓட்டம் ஒரே சீராக இருக்காது, சில நேரம் வேகமாகவும், சில நேரம் மெதுவாக அமைதியாகவும் ஓடும். ஆனால் தன் புகலிடம் நோக்கி எப்போதும் ஓடியவாறே இருக்கிறது.
நீங்களும் அவ்வாறே செயல்படுங்கள்.
மெல்ல நகர்வது நதியின் ஓட்டத்தைப் பாதிப்பதில்லை, வேகம் முக்கியம் இல்லை. தொடர்ந்து உங்கள் குறிக்கோள் நோக்கிய பயணம் தான் முக்கியம். உங்கள் முன்னேற்றத்தை நதியின் ஓட்டத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள். தொடர்ந்து முன்னேறும் இயக்கத்தை உணருங்கள்.
உங்கள் வாழ்க்கை குறிக்கோள் நோக்கி வழிநடக்கட்டும். திட்டமிட்ட வழியிலிருந்து திசை திரும்பாதீர்கள். மகத்தான தடுத்து நிறுத்த முடியாத சக்தியை உங்களுக்குள் உணருங்கள்.உங்கள் குறிக்கோளை அடைவதில் உறுதி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கட்டும்.
தொடர்ந்து ஓடுவதான, தடுக்க முடியாத மகத்தான ஓர் இயக்கம் உங்கள் வாழ்க்கை சென்றடையும் வழி என்று உணருங்கள்.
இந்த அசையும் நதியின் உணர்வு சதா உங்களுக்குள் இருக்கட்டும்.
-காப்மேயர்
இன்று இப்பொழுது தான் நம்முடைய நேரம்
கடந்த காலம் கழிந்து விட்டது !நீங்கள் நிகழ்காலத்தில் தான் வாழ முடியும்; கடந்தது கடந்தது தான். இந்த வாக்கியத்தை நீங்கள் நினைவில் நிறுத்தித் தொடர்ந்து கூறிவந்தால், அது உங்கள் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றியமைக்கும்.
நீங்கள் இறந்த காலத்தில் வாழ முடியாது. பழைய சுகங்களை அசை போட்டு அனுபவிக்கலாம். பழைய துக்கங்களை உங்களால் முழுவதும் மறக்க முடியாமல் போகலாம். ஆனால் நீங்கள் பழைய சுகங்களையும் துக்கங்களையும் பழைய நிகழ்ச்சியாகளாகவே பார்க்கவேண்டும்.
நினைவுகளாக அவை உங்கள் மனதில் நிற்கலாம், ஆனால் நிகழ்கால உணர்ச்சிகளாக அல்ல.
புத்திசாலித்தனமாக, வெற்றிகரமாக, மகிழ்ச்சிகரமாக வாழ்வதற்கு இது ஒரு முக்கியமான பாடமாகும். பழைய சுகங்களும் பழைய துக்கங்களும் மறைந்து விட்டன.
இறந்த காலம் கடந்து சென்றது. கதவை மூடிவிடுங்கள்.
பழைய சுகங்களும் பழைய துக்கங்களும் வெறும் நினைவுகளே. அவற்றை நிகழ்கால உணர்ச்சிகளாக மறு அவதாரம் எடுக்க வைக்காதீர்கள். இறந்த காலம் சென்று மறைந்தது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். நிகழ்காலம் கண் முன் இருக்கும் உண்மை. இறந்த காலத்தில் வாழவோ இல்லை அதை மாற்றவோ நம்மால் முடியாது.
உங்கள் கடந்த காலத் தவறுகளும் சென்று ஒழிந்துவிட்டன. அதன் விளைவுகள் சில நிகழ்காலத்திலும் உங்களுக்கு இடைஞ்சல் தரலாம். நிகழ்காலத்தில் அவற்றை எதிர் கொள்ள வேண்டி வரலாம். நடந்து முடிந்த தவறுகளைத் திருத்த முடியாது. அவற்றிலிருந்து உண்மைகள் உணரப்பட வேண்டும். உணர்வு பூர்வமாக அலசுங்கள் – உணர்ச்சி பூர்வமாக அன்று.
பழைய சோகங்கள், தவறுகள், எரிச்சல் இவற்றை நினைத்து உணர்ச்சி வசப்படுவோர் – நிகழ்காலச் சங்கடங்களை அதிகமாக்குகிறார்கள். மகிழ்ச்சியற்ற கடந்த காலத்தின் நினைவுகள் பற்றி உணர்ச்சி வசப்படும்போது நிகழ்காலம் மகிழ்ச்சியற்றதாகத்தான் இருக்கும்.
சென்றவை சென்று ஒழிந்தது, கதவைச்சாத்துங்கள்.
நிகழ்காலத்தில் வாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கும் கதவைத் திறந்து வையுங்கள். இன்று கைகொடுப்பவை நிகழ்கால வாய்ப்புக்கள் மட்டுமே.
இன்று இப்பொழுது தான் நம்முடைய நேரம்.
- காப்மேயர்
'வீட்டில் இருந்தபடி சம்பாதிப்பது எப்படி?', 'வீட்டுப் பெண்கள் வியாபார காந்தம்' ஆவது எப்படி?', என்பது தொடர்பாகப் பல கட்டுரைகள் ஊடகங்களில் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதைப் படிக்கும்போது நாமும் ஏதாவது செய்ய வேண்டும், சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகம் எழுவது உண்மைதான். ஏனென்றால், இந்தக்கால கட்டத்தில் மாத வருமானத்துடன் கூடுதல் வருமானமும் வருகிறது என்றால் யாராவது வேண்டாம் என்பார்களா? சரி, எப்படி இரண்டாவது அல்லது மூன்றாவது வருமானத்திற்குத் தயார்படுத்திக் கொள்வது, என்ன தொழில் செய்வது, எப்படி வருவாயைப் பெருக்கிக் கொள்வது என்பதில் ஆர்வமாக இருக்கிறீர்களா?
பெரிய அளவில் முதல் போட்டு, பல இயந்திரங்களை ஓட்டி, பல நூறு தொழிலாளர்களை நிர்வகித்து... எப்படி? எப்படி? என்று நீங்கள் மலைப்பது தெரிகிறது.
இந்த மலைப்பு, கவலை எல்லாம் இல்லாமல் கொஞ்சம் உழைப்பு, கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் ஈடுபாடு, கொஞ்சம் முதலுடன் உங்களது பொழுதுபோக்கான விஷயங்களையே எப்படி தொழில் ஆக்கலாம் என்பதைப் பற்றித்தான் நீங்கள் படிக்கப் போகின்றீர்கள்.
தொடர்ந்து படிப்பதற்கு முன் ஒரு கேள்வி!
உங்கள் எல்லோருக்குமே தொலைக்காட்சி பார்த்தல், தொலைபேசியில் அரட்டையடித்தல் போக மீதமுள்ள நேரத்தில் ஏதோ ஒரு பயனுள்ள பொழுதுபோக்கு இருக்கும். யோசியுங்கள். இந்த வயதில் இல்லையென்றாலும் சின்ன வயதில்... யோசியுங்கள். ஆம், இருக்கிறதல்லவா? அதுதான் தொழிலாக வடிவெடுக்கப் போகிறது!
எப்போதோ சிறு வயதில் நீங்கள் மனதார நேசித்து கற்றுக் கொண்ட அந்தப் பொழுதுபோக்கு உங்களுக்கு வருமானத்தை ஈட்டித் தரப் போகின்றது என்றால் அது எவ்வளவு எளிதான விஷயம், இல்லையா? ஆமாம்! இப்போதெல்லாம் பெரும்பாலான மக்கள் இந்த 9 மணி முதல் 5 மணி வரை என்ற வட்டத்திற்குள்ளிருந்து வெளியே வந்து தொழிலதிபர்கள் ஆகவே விரும்புகின்றனர்.
தொழில்களாக மாறக் கூடிய பொழுதுபோக்குகள்
முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டியது இதுதான். பயனுள்ள பொழுதுபோக்குகளே தொழில் ஆவதற்கான தகுதியைப் பெறும். சில உதாரணங்கள் இதோ. வாழ்த்து அட்டைகள், பேப்பர் பை, பொம்மைகள் போன்றவற்றை பொழுதுபோக்காய் செய்து பார்த்திருப்பீர்கள். கிளாஸ் பெயிண்டிங், கூடை பின்னுதல், சிகையலங்காரம், மெஹந்தி போன்றவற்றிலும் ஆர்வமாய் ஈடுபட்டிருக்கக் கூடும். உங்கள் தேவைக்கேற்ப ஊறுகாய், சீயக்காய்பொடி போன்றவற்றை தயாரித்திருக்கலாம். உங்களுக்குத் தெரிந்தவற்றை நீங்களும் கூறுங்கள்.
உங்கள் தேவைக்கு நீங்கள் செய்வதுபோல ஏன் மற்றவர்கள் தேவையை நீங்கள் பூர்த்தி செய்து, அதையே தொழிலாக மாற்றி, அதன் மூலமாய் வரும் வருமானத்தை அனுபவிக்கக் கூடாது?
மேலே கூறப்பட்ட உதாரணங்களைக் காணும்போது அவற்றைச் செய்வதற்கு, நேரம், பொறுமை, ஈடுபாடு, கற்பனைத் திறன் ஆகியன முக்கியம் என்பது புலனாகும். ஆனால், இவற்றை விற்பனை செய்வதற்கு இன்னும் கொஞ்சம் ‘அதிகப்படியான விஷயங்கள்’ தேவை. அவை என்னவென்று பார்ப்போமா?
ஆரம்ப ஏற்பாடுகள்
நீங்கள் முழுமனதுடன் தொழிலை ஆரம்பிக்க நினைத்தவுடன் செய்ய வேண்டிய முக்கியப் பணி, யார் யாரெல்லாம் தம்முடைய பொழுதுபோக்கினை வியாபாரமாக்கி உயர்ந்துள்ளார்கள் என்று ஆராய்வதுதான். ஆரம்பித்த நிலையிலிருந்து, விரிவாக்க நிலைவரை அவர்களுடைய அனுபவங்கள் எப்படிபட்டவையாக இருந்தன என்பதை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள். இது உங்கள் மனதில் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
அதன் பிறகு, நீங்கள் தயாரிக்க விரும்பும் பொருளை முடிவு செய்யுங்கள். அதே பொருளைத் தயாரிக்கும் வேறு நிறுவனங்களைப் பற்றியும், அவற்றின் தரம், விலைகளைப் பற்றியும் அறிந்து கொண்டு உங்கள் தயாரிப்புடன் ஒப்பு நோக்கிப் பாருங்கள். இந்த ஒப்பீடு உங்களின் தனித் தன்மையை அடையாளம் காட்டி தொழிலில் முன்னேற உதவும்.
பொருள் அறிமுகப்படுத்துதல்
நீங்கள் எந்தப் பொருளை வியாபாரம் செய்ய எடுத்துக் கொண்டாலும், முதல் கேள்வி, அதை எப்படி அறிமுகப்படுத்தப் போகிறீர்கள் என்பதுதான். நீங்கள் ஒரு மெழுகுவர்த்தியைத் தயாரிக்கப் போகிறீர்கள் என்றால், அதை உருவாக்கத் தேவைப்படும் கற்பனைத் திறனை விட, அதை அறிமுகப்படுத்துதலில் அதிக திறன் தேவைப்படும். புதுமையான அணுகுமுறையாக இருத்தல் நல்லது. ஞாபகம் இருக்கட்டும், இது போட்டிகள் நிறைந்த உலகம்! காலத்திற்கேற்றாற்போல மாறிக்கொள்ளுங்கள்.
சந்தைப்படுத்துதல்
உங்களுடைய தொழிலை எவ்வாறு சந்தைப்படுத்துவது? பெரும்பாலோர் தங்களுடைய வியாபாரத்தைப் பொருட்காட்சியில் துவக்குகின்றனர். சிலர் உள்ளூர்க் கடைகளில் துவக்குகின்றனர். உங்கள் ஊரில் நடைபெறும் பொருட்காட்சி, திருவிழா போன்றவை எந்தெந்த சமயத்தில் எங்கெங்கு நடைபெறுகின்றன என்ற தகவல்களை சேகரியுங்கள். உடனே அவ்விடத்தில் ஒரு ஸ்டால் அமைத்து விடுங்கள். நோட்டீஸ்களுடன் ஆஜராகி விடுங்கள். உங்கள் தொழில் பற்றிய முழு விவரங்களுடன் கூடிய கார்டுகளை அச்சடித்து வைத்துக் கொள்ளுங்கள். அங்கு வரும் உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்குத் தவறாமல் விநியோகம் செய்யுங்கள். மேலும், செய்தித்தாள்களில் செய்திகளாகவும் வெளியிடலாம். பலராலும் அறியப்படும்; செலவும் குறைவு.
அகலக்கால் வேண்டாம்!
நீங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழிலின் போக்கு எவ்வாறு இருக்கும் என்பதை உடனடியாகக் கூற முடியாது. அதற்கு சில வருடங்கள் கூடத் தேவைப்படலாம். இதை மனதில் கொண்டு கொஞ்சம் சிக்கனமாகவே இருங்கள். விளம்பரம் தேவைதான். ஆனால் அதற்காக பெரிய அளவில் செலவு செய்வதைத் தவிருங்கள். சிக்கனமாக, அதே நேரத்தில் ஆழமான பதிவினை ஏற்படுத்துகின்ற மாதிரி விளம்பரம் செய்யுங்கள்.
வரப்பிரசாதமான இணையம்
இக்காலத்தில் இணையம் மூலம் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை. நீங்களும் நம்பகமான இணையதளங்களில் உங்கள் தொழில் பற்றிய செய்திகளை வெளியிடுங்கள். அந்த இணையதளம் பலராலும் பார்த்துப் பயன்பெறக் கூடியதாக இருக்க வேண்டும். இதற்கு கொஞ்சம் அதிகம் செலவு செய்ய வேண்டி வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
சட்ட ஆலோசனை
பொழுதுபோக்காகக் கருதிய ஒன்று, வாழ்க்கைத் தொழிலாக மாறும் போது சில முடிவுகளைச் சட்ட ரீதியாக யோசித்து செயல்படுத்துவது மிக மிக முக்கியமாகும்.
1. உங்களுடைய தொழிலைப் பதிவு செய்து கொள்வது.
2. தொழிலுக்காக தனிப்பட்ட கணக்கினை வங்கியில் துவக்குவதோடு, தேவைப்பட்டால் தனி ‘கிரெடிட் கார்டு’ம் வாங்கிக் கொள்வது.
3. விரைவான பணப்பரிமாற்றத்திற்காக இணையதளம் மூலம் பணம் செலுத்தும் வகையில் ‘பே பால்’ போன்றவற்றில் கணக்குகளை ஏற்படுத்துவது.
4. எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் தனிப்பட்ட வரவு செலவுகளுடன், தொழில் வரவு செலவுகளை சேர்க்காமல் பார்த்துக் கொள்வது.
பின் குறிப்பு :
ஆரம்ப காலத்தில் உங்கள் குடும்ப உறுப்பினர்களையே உங்கள் உதவிக்குச் சேர்த்துக் கொள்ளுங்கள். அவர்களுக்கும் பொழுது போகும், உங்களுக்கும் செலவு குறையும்.
- சித்ரா பாலு
படிப்பது - போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள உதவும் !
எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம். விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர்வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
முன்னோர் தம் அறிவையும் அனுபவத்தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். “உன்னிடம் எதையும் எதிர்பார்க்காமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்” என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ. ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல. அவை உண்மைகளின் ஊற்றுக்ண். புத்துலகு நோக்கி மனிதனை வழி நடத்துபவை. புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறான்.
சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிற கருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிற நூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது. நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்களே. “நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக்கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களே” என்றார் கவிஞர் ராபர்ட் கதே.
“வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது” என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற்றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும். “காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றன” என்ற பேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு. நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக் குளியலுக்குள்ளானதும், புத்தகங்களின்பால் அச்சம் கொண்டவர்களை அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகளாகும். படையெடுப்பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்க தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோராகவும் விளங்கினார்.
நூல் படிக்கும் பழக்கம்
பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, “புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் “அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்” என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிற நல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்ற சிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். “மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதா விலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை. கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்ற புரட்சியாளர் தூக்குக் கயிற்றைஅவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.
நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப்பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டுமல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரணமாயிருந்தது. இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் ‘கற்றனைத்தூறும் அறிவு’ என்றவள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.
இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய்வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள்கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரியாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு. சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால்களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந்துணையாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை வாசிப்பு வழங்கும்.
வாங்கிப்படி
எட்டையபுரம் மகாராஜாவுடன் சென்னை சென்ற பாரதியார், “செல்லம்மா! வரும்போது உனக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வருகிறேன்” என்று மனைவியிடம் சொல்லிச் சென்றவர் மகாராஜா கொடுத்த பணத்தில் மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வாங்கி வந்து விட்டார். கோபமாய்ப் பார்த்த மனைவியிடம், “செல்லம்மா! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தைக் கொண்டு வந்துள்ளேன்” என்று கூறி சமாதானம் செய்தாராம்.
நம்மவர்க்கு நூல்களை விலைபோட்டு வாங்கிப் படிக்கிற பழக்கம் மிகமிகக் குறைவு. படிப்பவர்களிலும் இரவல் வாங்கிப் படிப்பவர்களே மிகுதி. அப்படி இரவல் வாங்கிச் செல்கிற பலர் நூல்களைத் திருப்பித் தருவதே இல்லை. ஒருமுறை ஆங்கில நாடக நூலாசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் பேசும்போது “புத்தகங்களை இரவலாக வாங்கிச் செல்வோரில் சிலர் திருப்பித் தருவதே இல்லை. என்னிடம் பெரிய நூலகமே உள்ளது. அதில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அப்படி வந்தவையே” என்றாராம். தாங்கள் வாங்கிய நூலை மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்கிற தாராள மனம் கொண்டவர்கள் கூட, நாணயமற்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறவர்கள் இரவல் கேட்கும் போது மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அப்படியே நூல்களை இரவல் வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தாலும் அது உருக்குலைந்து கிழிந்து அழுக்காகி வந்து சேரும்.
“பொன்னள்ளித் தந்தாலும் தருவேன் அன்றி புத்தகத்தை நானிரவல் தரவே மாட்டேன்! கன்னியரை புத்தகத்தை இரவல் தந்தால் கசங்காமல் வீடுவந்து சேர்வதில்லை!” என்பார் கவிஞர் சுரதா. இதற்கு மாறான சில நிகழ்வுகளும் உண்டு. கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளைப் பிரிப்பதற்காக நெடுஞ்சுவர் ஒன்று எழுப்பப் பட்டது. இதனால் மேற்கு பெர்லின் அமெரிக்கன் மெமோரியல் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துச் சென்ற ஒரு கிழக்கு ஜெர்மன் வாசகரால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இருபத்தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நெடுஞ்சுவர் இடிக்கப்பட்டு இரு ஜெர்மனிகளும் இணைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த வாசகர் புத்தகங்களைப் பத்திரமாகத் திரும்ப ஒப்படைத்தாராம். இதில் பின்னவரைப் பின்பற்ற முயல்வோம். இரவல் பெற்றதைத் திருப்பித் தருவதன் மூலம் நட்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வோம். சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ தாளின் தரத்திலோ, அட்டையின் அழகிலோ இல்லை. வாசிப்பவரது மனதில் அது உண்டாக்கும் தாக்கத்தில் மறைந்திருக்கிறது. எனவே சிறந்த நூல்களுக்குச் செலவிடுவது செலவே அல்ல. அது சேமிப்பு. சேமிப்பு எதற்கு? தேவை வரும் போது பயன்படுத்தத்தான். இடுக்கண் வருங்கால் உடுக்கை இழந்தவன் கை போல ஓடி வந்து உற்ற துணையாக, வழி காட்டியாக இருப்பவை நூல்களே. நமக்கு மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கும் உங்களது சந்ததியர்க்கும் அது வழி காட்டும், வாழ்வில் ஒளி காட்டும். முன்பெல்லாம் தங்களுக்குப் படிக்கத் தெரியவில்லை என்றாலும் புத்தகங்களை வாங்கி வீட்டில் வைத்துப் பாதுகாப்பார்களாம். ஏன் தெரியுமா? தமது சந்ததியர்க்கு அவை பயன்படுமே என்றுதான். “புத்தகமே சாலத் தொகுத்தும் பொருள் தெரியாது உப்பத்து அகமே வைப்பர்” என்கிறது ஒரு பழம்பாடல்.
நூல்களை அரிய செல்வமாகப் பல நாட்டினரும் மதித்துப் போற்றிய வரலாற்று நிகழ்ச்சிகள் சிலவற்றைக் காண்போம்.
சீன நாட்டிலிருந்து வந்த யுவான் சுவாங் என்னும் அறிஞர் நாளந்தாப் பல்கலைக்கழகத்தில் பயின்றார். பின் சில காலம் அங்கேயே பேராசிரியராகவும் இருந்தார். பின் தாயகம் திரும்பி, புத்தமதப் பிரச்சாரம் செய்ய விரும்பினார். அதற்காகச் சில அறநூல்களையும் தம்முடன் எடுத்துச் சென்றார். மாணவர்கள் பலர் வழியனுப்பச் சென்றனர். படகு சிந்து நதியின் நடுவில் சென்று கொண்டிருந்தது. அப்போது புயல் வீசியது. படகு கவிழ்ந்து விடுமோ என்று அனைவரும் அஞ்சினர். யுவான் சுவாங் தாம் கற்றவையனைத்தும், கொண்டு செல்ல நினைத்தவைனைத்தும் பயனற்றதாகிவிடுமோ என்று முகம் வாடினார். அதுகண்ட மாணவர்கள் பாரம் குறைந்தால் படகு தப்பக்கூடும் என நினைந்து அறிவுச்செல்வத்தை விட தம்முயிர் பெரிதல்ல என்பதனையும் நினைத்து ஆற்றில் குதித்து விட்டனர். அது அவர்களைத் தனதாக்கிக் கொண்டது. யுவான் சுவாங்கும் அறிவு நூல்களோடு இந்திய மாணவர்களின் தியாக உணர்வையும் சுமந்து கொண்டு கரைசேர்ந்தார். இதயத்தைத் தொடும் நிகழ்ச்சி மட்டுமன்று இது. இமயத்தை எட்டும் உயரிய நிகழ்ச்சியும் இது எனலாம்.
கி.பி. 23-74 இல் வாழ்ந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த “பிளினி” என்பவர் தம் நூலில் குறிப்பிடும் ஒரு செய்தி, “அரசர் டாரியஸ் மீது அலெக்ஸாந்தர் படையெடுத்துச் சென்று அவரைத் தோல்வி பெறச் செய்தபோது, அப்போர்க் களத்தில் வீரர் ஒருவர் உடலுக்கடியில் பொன்னால் செய்த கூடையொன்றில் நவரத்தினங்கள் பலவும் மலர்களும் திணித்து மற்றும் நறுமணப் பொருள்களும் நிரப்பி வைத்திருப்பதைக் கண்டார். அவ்வரிய கூடையின் பயனைப் பற்றி அலெக்ஸாந்தரின் வீரர்கள் பலர் பலவிதமாக எடுத்துக் கூறினர். ஆயினும் அவர்கள் கூறுவதைக் கவனமாகக் கேட்டுவிட்டு “இருப்பினும் கடவுள் ஹெர்குலிஸ் சாட்சியாகக் கூறுகிறேன். இக்கூடை ஹோமர் அவர்களுடைய காவியத்தை வைத்துப் பாதுகாக்க மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்” என்று ஆணையிட்டார். இதனாலும் நூல்கள் எந்த அளவு போற்றிக் காக்கப்பட்டன என்பதை அறிகிறோம்.
எது சிறந்த புத்தகம்?
பாட நூல்களைப் படிப்பது மிகையாக மதிப்பெண் பெறுவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால் பொது நூல்கள் வாழ்க்கை முறை மற்றும் ஒழுக்க நெறிகளை நோக்கமாகக் கொண்டது. நல்வாழ்வுக்கு அடித்தளம் அமைப்பது நற்குணங்கள். அந்த நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நூல்களே. படிக்க எடுத்த பிறகு படித்து முடிக்கும் வரை கீழே வைக்க விடாமல் நமது ஆர்வத்தைத் தூண்டச் செய்கிற புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம். பக்கத்துக்குப் பக்கம் அடிக்கோடு இட்டு வைக்கக்கூடிய அற்புத வரிகளைத் தாங்கிக் கொண்டிருக்கிற புத்தகம் எதுவோ அதுவே சிறந்த புத்தகம். ஒரு முறைக்குப் பலமுறை திரும்பத் திரும்ப படிக்கத் தூண்டும் புத்தகம் எதுவோ, அதுவே சிறந்த புத்தகம்.
தூங்கச் சென்றவன் தூக்கம் வருவதற்காக புத்தகத்தைப் புரட்டுகிறபோது எந்தப் புத்தகம் அவனைத் தூங்க விடாமல் புரட்டிப் போடுகிறதோ, சொக்க வைக்கும் தூக்கத்தில் படிக்கும் போதும் எந்த நூல் ஒருவனை விழிப்படையச் செய்கிறதோ அதுவே சிறந்த புத்தகம். நல்ல நூல்களைப் படிப்பதற்கு ஆகும் நேரத்தைவிட அவற்றைத் தேர்ந்தெடுப்பதற்கு அதிக நேரமாகும்.
புற்றீசல் போல புதுப்புது நூல்களும் பத்திரிகைகளும் தினந்தினம் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் நமது வாழ்க்கைக்கும் வளர்ச்சிக்கும் முயற்சிக்கும், முன்னேற்றத்திற்கும் வேண்டியவை எவையெவை என்று தேர்ந்தெடுத்து உப்புச் சப்பில்லாத குப்பைகளை ஒதுக்கி விடுகிறதெளிவு வேண்டும். நல்ல நூல்களை மட்டும் வாங்கிப்படிக்க வேண்டும்.
நூலகங்கள்
உங்கள் மனதுக்குப் பிடித்த இன்பமயமான ஓர் இடத்தின் பெயரைச் சொல்லுங்கள் என்று ஆப்ரகாம் லிங்கனிடம் கேட்ட போது என் மனதிற்குப் பேரின்பத்தை அள்ளி அள்ளி வழங்கும் ஒரே இடம் நூலகமே என்று கூறியுள்ளார்.
வீடு தோறும் நூலகம் வேண்டும் என்றார் அண்ணா. இந்த மின்னணு யுகத்தில் கூட கணினி, இணையம், இணைய தளம், மின்னணு நூலகம் ஆகியவற்றின் மூலம் தேவையான செய்திகளைப் பெறமுடியும் என்றாலும் நூலகம் தனக்குரிய இடத்தை இழந்து விடவில்லை. எவ்வளவுதான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் புத்தகத்தைக் கையிலெடுத்துப் படிப்பதில் ஒரு தனிச்சுகம் உண்டு. இன்டர்நெட்டில் ஒன்றைப் படிக்க வேண்டும் என்றால் பல அம்சங்கள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் புத்தகம் கையில் இருந்தால் படிப்பதற்கு ஒரு தடையும் இல்லை. உட்கார்ந்து படிக்கலாம், கொஞ்சம் சாய்ந்தவாறு படிக்கலாம், மொட்டை மாடியில், படிக்கட்டில், வயல் வரப்பில், பிரயாணத்தில் என்று எங்கும், எப்படியும் படிக்கலாம்.
தமது துறைநூல்கள்
உங்கள் துறையில் சிறந்து விளங்க என்னென்ன நூல்களைப் படிக்க வேண்டும் என்பதைப் பட்டியலிடுங்கள். சில நூல்களைச் சொந்தமாகவும், வாங்கி வைத்திருக்க வேண்டும். மேலும் எந்த துறையில் சிறப்புப் பெற விரும்புகிறோமோ அல்லது வருங்காலத்தில் தொழில் தொடங்க உள்ள அல்லது பணியாற்ற உள்ள அல்லது போட்டித் தேர்வு எழுத உள்ள பாடம் எது எனத் தீர்மானித்து விட்டாலோ அந்தப் பாடத்தில் உள்ள வேறு சில சிறந்த நூல்களையும் படிக்க வேண்டும்.
நாம் சேர்ந்துள்ள துறையில் உள்ள நூல் களைப் படிப்பதால் துறையறிவு பெருகும், தெளிவு பிறக்கும், தன்னம்பிக்கை வளரும், ஆய்வுக்குரிய இடைவெளிகளை அடையாளங் காண முடியும். சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் கேட்க வேண்டுமென்றால் அவரிடம் போய்க் கேளுங்கள் என்று பலரும் சொல்லக் கூடிய நிலை வரும். பணியாற்றும் துறையில் அறிவு ஜீவியாக, விவரமறிந்தவராக விளங்குவதே உயர்ந்த நிலைதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டால் பதவிகளும், பட்டங்களும் இன்ன பிற அங்கீகாரங்களும் அவர்களைத் தேடி வரும்.
வாழ்வை முன்னேற்றும் வளமான நூல்கள்
மாமனிதர்களின் வாழ்க்கை வரலாறு களைப் படிப்பது நம்மைச் சரியான வழியில் நடக்கவும், நம்மிடமுள்ள குறைகளை வெளியே கொட்டிவிட்டு நிறைகளை நிரப்பிக் கொள்ளவும் உதவும். நீங்கள் எந்தத் துறையில் சாதனை புரிய விரும்புகின்றீர்களோ அந்தத் துறையில் உயர்ந்த நிலையை அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைத் தேடிப் படியுங்கள். அவர்கள் சந்தித்த தடைகளைத் தகர்த்தெறிய கடைப் பிடித்த அணுகு முறைகளை நமக்குப் படிகளாக்கிக் கொள்ளவும், அவர்கள் விட்டதிலிருந்து அடுத்த படிக்கு மேலேறிச் செல்லவும் அவை துணைபுரியும். வாழ்க்கை வரலாறுகளை மட்டுமின்றி சாதாரண மனிதனை சாதனையாளனாக்க வழிகாட்டுகிறசுயமுன்னேற்றநூல்களைப் படிப்பது நம்மை மேன்மைப்படுத்தும்.
நெப்போலியன் கில், நார்மன் வின்சென்ட் பேல், டேல் கார்னகி, ஜேம்ஸ் கேலன், டி எட்வர்டு போனோ, ராபர்ட் ஆண்டனி போன்ற ஆங்கில எழுத்தாளர்களின் சுயமுன்னேற்ற நூல்களைப் படிப்பது நம் வளர்ச்சிக்கு படிக்கல்லாகும். இவர்களின் நூல்கள் அந்தந்த நாட்டின் நடப்புகளுக்கும், நாகரிகங்களுக்கும் ஏற்ப எழுதப்பட்டிருப்பினும் அடிப்படையான உண்மைகள் நமக்கும் ஏற்றதே.
தமிழில் வந்துள்ள தன்னம்பிக்கையை வளர்க்கும் தரமான நூல்கள் இதோ.
1. அப்துற்றகீமின் “வாழ்க்கையில் வெற்றி”
2. அகிலனின் “வாழ்க்கையில் வெற்றி”
3. வ.உ.சி.யின் “மனம் போல் வாழ்வு”
4. மு. வரதராசனாரின் “நல்வாழ்வு”
5. விடுதலை கி. வீரமணியின் “வாழ்வியல் கட்டுரைகள்”
6. இல.செ. கந்தசாமியின் “முன்னேற்றத்திற்கு மூன்றே படிகள்”
7. எம்.எஸ். உதயமூர்த்தியின் “எண்ணங்கள்”
8. பி.சி. கணேசனின் “உங்களால் முடியும்”
9. மெர்வினின் “வாழ்க்கை உன் கையில்”
10. பெரு. மதியழகனின் “நினைவாற்றல் மேம்பட வழி”
ஆகியவை படிக்கப் படிக்க உங்களை வெற்றிக்கு ஆற்றுப்படுத்தும் ஆற்றல் படைத்தவை.
இங்கே குறித்துள்ள நூல்கள் சிலதான். இன்னும் ஏராளமான சிறந்த நூல்களை நீங்கள் படிக்க வேண்டும். குறைந்தது இவற்றையாவது படிப்பது போட்டிகள் நிறைந்த இந்த உலகில் உங்களை வெற்றியாளர்களாக ஆக்கிக் கொள்ள உதவும்.
படிப்பதும் தியானமே
புத்தகம் படிப்பது கூட ஒரு வகையான தியானம்தான். தியானம் என்றால் தன்னை மறத்தல். புறவுலக தாக்கங்கள் ஏதுமின்றித் தன்னையே மறந்திருக்கிறநிலை நூல்களை ஆழ்ந்து படிக்கும் போது ஏற்படும். என்னைப் பொறுத்த வரை புத்தகங்களுக்குள் புகுந்து கொண்டால் புற உலகை மறந்து விடுகிற ஆனந்த நிலையை அவ்வப்போது அனுபவிக்கிறேன். ஆழ்ந்து படிக்கிற அத்தனைப் பேருக்கும் இத்தகு அனுபவம் இருக்கும். இதுவும் ஒரு வகைத் தியானம் என்பதில் தவறேதுமில்லை.
புத்தகப் பிரியர்களுக்கு நெஞ்சம் கவர்ந்த நூல்கள் கிடைத்து விட்டால் போதும், எதைப் பற்றியும் இலட்சியம் செய்யாமல் வாசித்துக் கொண்டே இருப்பார்கள். பேருந்துகளில், தொடர் வண்டிகளில், பூங்காவின் இருக்கைகளில் இப்படி அமர்ந்து படிக்க இடம் கிடைக்கும் இட மெங்கும் வாசித்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்க முடியும். வாசிக்கிறசுகம் அவர்களை ஆனந்தத்தின் எல்லைக்கு அழைத்துச் சென்று விடும். சிலர் வீட்டிற்குச் சென்றால் கழிப்பறையில் கூட புத்தகம் இருக்கும். புத்தகத்தை சரஸ்வதியாக்கி பூசையறையில் வைத்து வாசிக்காமல், பூசை போடுவதை விட நேசிக்கிற புத்தகத்தைக் கழிப்பறையில் வாசிப்பதில் ஒன்றும் குற்றமில்லை. அது வாசிக்கப்படுகிறதா? என்பது தான் முக்கியம். எங்கே வாசிக்கப்படுகிறது என்பதன்று.
டாக்டர். பெரு. மதியழகன்
தன்னாளுமை என்னும் மண்ணாளும் மகத்துவம்
முதல் சதுரம்நம்மை நமக்குக் காட்ட உதவும் உன்னதம்
நமக்கு என்னென்னவோ தெரியும். பொது அறிவிலிருந்து, புது அறிவு வரை எல்லாம் தெரிகிறது. எத்தனையோ இயல்கள் எத்தனையோ இசங்கள் எத்தனையோ புத்திகள் எத்தனையோ தத்துவங்கள் எத்தனையோ மொழிகள் – எல்லாம் அத்துப்படி.
ஆனால் நமக்கு ஒன்று மட்டும் – உறுதியாகப் பிடிபடுவதில்லை. அதென்ன கடவுளா? – இல்லை. நம்மைத் தெரிவதில்லை நமக்கு. நமக்கே நம்மைத் தெரியாத நிலைதான் மிகவும் பரிதாபத்திற்குரியது. நமக்கு உலகத் தலைவர்களைத் தெரியும், உலக விஞ்ஞானிகளைத் தெரியும், உலகக் கலைஞர்களைத் தெரியும், உலக ஞானிகளைத் தெரியும். ஆனால் நம்மிடமே இருக்கும் நம்மை மட்டும் தெரியாது. நமக்கு நம்மைக் காட்டும் கண்ணாடியும் இதுவரை கண்டுபிடிக்கப்படவே இல்லை.
நம்மை எப்படி நமக்குத் தெரியாமல் போனது? “எனக்கு நன்றாகத் தெரியும்” – என விவாதிக்க நம்மில் பலர் காத்துக் கொண்டிருக்கலாம். முதலில் அவர்களின் துணிவுக்கும், நம்பிக்கைக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள். “என்னை எனக்குத் தெரியும்” – என்று சொல்லத் தேவையான துணிவை விட பன்மடங்கு துணிவு என்னை எனக்குத் தெரியவில்லை – என்று ஒத்துக்கொள்ளத் தேவைப்படுகிறது என்பதுதான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அதிசயமாகும்.
நண்பர்களே... நம்மை நாமே அறிய உதவும் ஒரு சதுரத்தை – முதல் சதுரமாய் இப்போது காண்போம். வெறும் சதுரத்தையா காணப்போகிறோம். நம்மையே நாம் காணப்போகிறோம். உங்களுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்கிறதா இல்லையா? உற்சாகமும், ஊக்கமும் பிறக்க வேண்டும். ஏனெனில் நம்மில் பலருக்கும் நம்மைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.
வாருங்கள்… அந்தச் சதுரத்தைக் காண்போம். இது நான்கு சதுரங்களை உள்ளடக்கிய ஒரு பெரிய சதுரம். இது ஒரு ஜன்னல் மாதிரி. நான்கு கதவுகள் இதற்கு உண்டு. இந்த ஜன்னல் வழியாக நாம் புறத்தைக் காணப் போவதில்லை. நம் அகத்தைக் காணப் போகிறோம். ஆமாம். நம் மனதைக் காணப் போகிறோம்.
மனமென்பது உருவமோ அல்லது வடிவமோ இல்லாதது. அதை எப்படி ஒரு ஜன்னலின் வழியாகக் காண்பது என்னும் வியப்பு – ஒரு பெரும் வினாக்குறியாக நம் மனதில் விழக்கூடும்.
சற்றே கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்குங்களேன்.
மனம்
ஒன்றாம் சதுரம் நம் மனதின் – திறந்த பகுதியை அடையாளங்காட்டுவது.
இரண்டாம் சதுரம் நம் மனதின் – மறைந்த பகுதியை அடையாளங்காட்டுவது.
மூன்றாம் சதுரம் நம் மனதின் – குருட்டுப் பகுதியை அடையாளங்காட்டுவது.
நான்காம் சதுரம் நம் மனதின் – இருண்ட பகுதியை அடையாளங்காட்டுவது.
அதென்ன திறந்த பகுதி, மறைந்த பகுதி, குருட்டுப் பகுதி – என்கிறீர்களா? நல்ல கேள்வி. இவை நான்கும் – நம்மை நமக்குக் காட்டப்போகும் கதவுகளாகும்.
திறந்த பகுதி என்பது – திறந்து கிடக்கும் வீடு மாதிரி, உள்ளிருப்பவை வெளியில் தெரியும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நிலையிலிருக்கும் ஒரு பகுதி. தன்னைப்பற்றித் தனக்கும் தெரிந்திருக்கும் – தன்னோடு பழகும் பிறருக்கும் தெரியும்.
மறைத்த பகுதி என்பது – தன்னைப் பற்றித் தனக்குத் தெரிந்த சில விஷயங்கள் பிறருக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கும் பகுதி. விரும்பியோ அல்லது விரும்பாமலோ வெளிப்படுத்தப்படாமல் இருக்கும் பகுதி.
குருட்டுப் பகுதி என்பது – தன்னைப்பற்றி பிறருக்கெல்லாம் தெரிந்தாலும் தனக்கு மட்டும் தெரியாதிருக்கும் – பகுதியைக் குறிக்கிறது. (நம் செயல்பாடுகள் பிறருக்குத் தெரியும் ஆனால் நாம் அதனை உணராதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருப்போம்).
இருண்ட பகுதி என்பது – தன்னைப்பற்றி தனக்கும் தெரியாமல், பிறருக்கும் தெரியாமல் மர்மமாய் இருக்கும் மனப்பகுதி. இங்குதான் வாழ்வின் எதிர்காலம் புதைந்து கிடக்கின்றது. தோண்டித் துருவி எடுத்து மேம்படுத்தப்பட வேண்டிய கற்பக விருட்சமோ, அட்சய பாத்திரமோ இதனுள்தான் இருக்கிறது.
மேற்கண்ட 4 பகுதிகளில் எந்தப் பகுதி சிறந்த பகுதி? எந்தப் பகுதி அதிகமாக இருந்தால் வாழ்க்கை சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்? மனதின் திறந்த பகுதி அதிகமாக இருந்தால் மகிழ்ச்சி தானே வரும். மறைந்தும் குருடாகியும் இருண்டும் கிடக்கும் மனதால் எவ்விதப் பயனுமில்லை. எனவே நான்காய் பிரிந்து கிடக்கும் மனதை திறந்து கொண்டு ஒரு பெரிய மனதாய் மாற்றியமைக்க வேண்டும். அதற்கு மற்ற மூன்று பகுதிகளையும் சிறிது சிறிதாய் குறைக்க வேண்டும்.
சரி… அதை எப்படிச் செய்வது எனக் காண்போம். முதலில் மறைத்த பகுதியைக் குறைக்க பிறரோடு நமது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்க வேண்டும். மிகவும் நெருங்கியவர்களிடமாவது நமது மனதைத் திறந்து “பேச” முற்படவேண்டும். உண்மை பேச வேண்டும். பேசப்பேசத் தான் மறைத்த மனது குறையத் தொடங்கும். மனதின் பாரம் குறைந்து விடும். மனம் லேசாகும்.
அடுத்த பகுதியாகிய குருட்டுப் பகுதியைக் குறைக்க வேண்டுமெனில் நம்மிடம் அக்கறை கொண்ட பிறரைப் பேச அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல அவற்றைக் காது கொடுத்தும் கேட்கவும் வேண்டும். பிறர் சொல்லை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் கேட்டுக் கொள்ளவும், கவனிக்கவும் தயக்கம் காட்டக்கூடாது. அப்போதுதான் நம்முடைய குறைபாடுகள் நமக்குத் தெரியவரும். நமது குறைபாடு நமக்குத் தெரிந்து விட்டால் – அவற்றை மாற்றிக்கொள்ள நாம் முயற்சி மேற்கொள்ளலாம். அப்போது நம் வாழ்வில் மேம்பாடு நிகழும்.
அடுத்ததாக இருண்ட பகுதியைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்கு நாம் செய்ய வேண்டுவதெல்லாம் “தேடல்” தான். நம்மிடமுள்ள திறமைகள் என்ன? நமது ஆர்வம் அல்லது விருப்பமென்ன? நமது இலக்கு என்ன? நமக்கான வாய்ப்புகள் என்னென்ன? நமக்கான தடைகளை எப்படித் தகர்த்து முன்னேறுவது – எனத் தொடரும் “தேடல்” மூலம் இந்த இருண்ட பகுதியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிச்சம் கொணர முடியும்.
மேற்கண்ட முயற்சிகளால் – நம் மனதை நன்றாகத் திறந்துகொள்ள முடியும். மனம் திறந்து கொண்டால் மற்றவர்கள் நம்மை புரிந்து ஏற்றுக் கொள்வார்கள், நம்மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதனால் நமது தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மனம் திறக்க திறக்க நமது வெற்றிக்கான மார்க்கமெல்லாம் புலப்படத் தொடங்கும்.
அதனால் மனதில் நிம்மதியும் ஆனந்தமும் நிரந்தரமாய் தங்கிவிடும்.
விளைவு: நம் சிந்தனையும், முடிவுகளும், செயல்பாடுகளும் சிறப்பாய் அமையும்.
காலத்தின் அருமையை உணர்ததும் உன்னதம்
மூன்றாவது சதுரம் மிகவும் முக்கியமான காலத்தை உணர்த்துவது. காலம் மிகவும் அற்புதமானது. காலம் என்பது கடந்துவிட்டால் மீண்டும் கிடைக்காதது. காலம் என்பது அனைவருக்கும் பொதுவானது. காலம் என்பது ஒவ்வொருவர் கையிலும் கிட்டியிருக்கும் பொக்கிஷமாகும். மனிதவளம் என்பது – இந்தப் பிரபஞ்சத்தின் மூலதனம் என்றால் காலமானது – இந்த மனிதவளத்தின் மூலதனம் என்பது மறுக்க முடியாததாகும். இந்த மூலதனத்தை முறையாகப் பயன்படுத்தும் மார்க்கம் தெரியாததால் நம்மில் பலரும்
வாழ்வின் மிக முக்கியமான அம்சங்களை இழந்து நிற்கிறோம். பலவற்றை இழந்த பிறகே – பலருக்கும் இந்தக் காலத்தின் அற்புதம் புரிய வருகிறது. இந்நிலை ஏற்படாமல் தடுத்து இளைய தலைமுறைக்கு வழிகாட்டும் பொருட்டு நாம் இந்த சதுரத்தைப் புரிந்துகொண்டு செயலாற்ற வேண்டியிருக்கிறது.
உற்று நோக்கினால் மேற்கண்ட நான்கு சதுரங்களில் காலம் சதுரங்கம் ஆடுவதைக் காணலாம். மேற்கண்ட பெரிய சதுரத்தின் மீது கவனத்தைக் குவியுங்கள்.
சதுரம் – 4 ல் குறிப்பிட்டுள்ள காரியங்கள் யாவும் எந்தவித அவசரமோ, அவசியமோ அற்றவையாகும். இவை குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையே இல்லை. ஆனால் நமது அன்றாடச் செயல்பாடுகளில் பலவும் இத்தகைய வகையைச் சேர்ந்ததே ஆகும். எடுத்துக்காட்டாக கூறவேண்டுமெனில் எந்தவித தேவையுமற்ற தொலைபேசி உரையாடல்கள், வெற்று அரட்டைகள், வெறும் கேளிக்கைகள், எந்த நோக்கமுமற்ற பொழுதுபோக்குகள் இவையாவும் – அவசரமோ, அவசியமோ அற்ற செயல்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும், இவற்றை நாம் அடையாளம் காண வேண்டும். அடையாளம் கண்டு அவற்றைத் தவிர்க்க முயற்சிகள் எடுக்க வேண்டும். முனைப்புடன் செயல்பட வேண்டும்.
சதுரம் – 3 : இதில் அவசியமற்ற ஆனால் அவசரமான செயல்களை உள்ளடக்கிய சதுரமாக இது விளங்குகிறது. நம்மைத் தொந்தரவு செய்யும் வேண்டாத சில தொலைபேசி அழைப்புகள், எதிர்பாராத சில விருந்தாளிகளின் வருகை, சில கூட்டங்கள், சில மனுக்கள் தயாரித்தல், சில கடிதங்கள் எழுதுதல் போன்றவை அவசியமாய் இருக்க மாட்டா. ஆனால் அவசரமாய் செய்தாக வேண்டியவையாய் இருக்கும். இவை பெரும்பாலும், பிறருக்காகச் செய்யப்படும் செயல்களாக இருக்குமே அன்றி, நமது குறிக்கோளை அடைவதற்கான காரியங்களாக இருக்கமாட்டா என்பதை உணர்தல் அவசியமாகும்.
மேற்கண்ட சதுரம் – 4 மற்றும் சதுரம் – 3 – இவை இரண்டையும் ஊன்றி நோக்கினால் ஒன்றை உணரலாம். இவை இரண்டிலும் அதிக நேரத்தைச் செலவிடுபவர்கள் எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதவர்களாகவும், பெரும் பொறுப்பு எதையும் ஏற்றுச் செய்யாதவர்களாகவும் இருப்பார்கள். பொழுதுபோக்கும் முகமாக – பிறரின் காரியங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்பவர்களாகவும் காணப்படுவார்கள். இவர்கள்.
செயல்திறனும், செய்நேர்த்தியும் மிக்கவர்கள் இந்த இரண்டு சதுரங்களுக்குள் சிக்கிக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில், அவசரமாய் இருந்தாலும் அவசியமில்லை என்பதால் அவசியமற்றதில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள மாட்டார்கள். எனவே நாமும் செய்நேர்த்தி மிக்கவர்களாக வாழ வேண்டுமெனில் அவசியமற்றவற்றை ஒதுக்கிவிட்டு நேரத்தை முறையாகப் பயன்படுத்தப் பழக வேண்டும்.
இப்போது, முதல் சதுரத்தைப் பாருங்கள். அங்கே குவிந்து கிடக்கும் காரியங்கள் யாவும் அவசரமாகச் செய்து முடிக்கப்பட வேண்டிய நிலையிலும், அவசியம் செய்து முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதை நம்மால் உணர முடியும். பெரும்பாலான சமயங்களில் நமது செயல்பாடுகள் இப்படித்தான் உள்ளன.
எல்லாச் செயல்பாடுகளையுமே, இப்படி ஒரு நெருக்கடி காலச் செயல்களாக மாற்றிக்கொண்டு அவதிப்படுகிறோம். அவற்றை எப்போது செய்து முடித்திருக்க வேண்டுமோ அப்போது அவற்றைச் செய்து முடிக்க முனைவதில்லை. ஒத்திப் போடுதல் என்னும் மனோபாவம் நம்மை உதறிப் போட்டு விடுகிறது.
“வேலை இல்லை வேலை இல்லை” – என அங்கலாய்க்கும் இளவட்டங்கள் கூட தங்கள் வேலைக்கான மனுவை உரிய நேரத்தில் அஞ்சலில் சேர்க்காமல், இறுதி நாளில் அதை எடுத்துக்கொண்டு, அடுத்த நாளே சேர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டுமெனப் பலரிடமும் கேட்டுத் திரிவதைக் காண முடியும். “ஏன்? இத்தனை நாளாய் என்ன செய்தாய் என்று கேட்டுப் பார்த்தால்; இன்னும் நாள் இருக்கிறதே என்று தள்ளிப் போட்டேன். கடைசியாய் பார்த்தால், தாசில்தார் ஊரில் இல்லாமல் போய், சாதிச்சான்றிதழுக்காக ஒரு வாரம் காத்திருக்க வேண்டியதாயிற்று” – என்பார் அந்த இளைஞர்.
ஏன் இந்த நிலைமை? காலத்தின் அருமையை உணராமைதான் காரணம். சோம்பலும், எது முக்கியம் அல்லது எது அவசரம் எனப் புரியாமையுமே – இதற்குக் காரணம். ஒரு நொடி தாமதிப்பதால் ஏற்படும் இழப்பை – முதலாவதாய் வந்து தன் முத்திரையைப் பதிக்க முடியாமற்போகும் ஒரு விளையாட்டு வீரன் உணர்வான்! இழந்தபின் அழுது என்ன பயன்? ஆகவே காலத்தின் அருமையை அறிந்து உணர்தல் அவசியம். நேரத்தின் அவசியத்தை உணர வேண்டுமெனில் நமது அன்றாடப் பணிகளைப் பட்டியலிட வேண்டும். பிறகு அவசியமானவற்றையும் அவசரமானவற்றையும் அடையாளம் காண வேண்டும்.
மாறாக சதுரம் – 2 ஐக் கவனியுங்கள். அங்கே “அவசரமற்ற ஆனால் அவசியமான” – காரியங்கள் மட்டுமே மிஞ்சும். இந்தச் செயல்களை உடனடியாக முடிக்க வேண்டிய அவசரமில்லை. ஆனால் அவசியம் முடித்தாக வேண்டும் என்பவை இவை. இவற்றில்தான் நாம் நமது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால் நமக்கும் அவசரமோ, ஆத்திரமோ இல்லாமல் நிதானமாகத் திட்டமிட்டு தீர்க்கமாக வெற்றிகரமாக நமது காரியங்களைச் செய்து முடிக்க முடியும். அத்தகைய காரியங்களே நம்மை செய்நேர்த்தி மிக்கவர்களாக உலகுக்கு அடையாளம் காட்டும்.
வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்தால் அவர்களெல்லாம் சதுரம் – 4 மற்றும் சதுரம் 3 இரண்டையும் புறக்கணித்து விட்டவர்களாகவும், சதுரம் – 1ஐ ஏறிட்டும் பார்க்க வேண்டிய அவசியமில்லாத வர்களாகவும் திகழ்வார்கள்.
காரணம் என்னவெனில் அவர்களின் கவனமும் ஈடுபாடும் அர்ப்பணிப்பும் சதுரம் -2 லேயே குவிந்திருக்கும்.
அவர்களுக்கு “எது அவசியம்” – என்பது புரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அவசரமானாலும் கூட அவசியமற்றதென்றால் அவர்கள் அதனைப் புறக்கணித்துவிடத் தயங்காத உறுதியான உள்ளம் படைத்தவர்களாகவும் திகழ்வார்கள். அதுமட்டுமல்லாமல் அவர்கள் எல்லாம் தங்களுக்கென சில இலக்குகளை முன்வைத்து இயங்கிக் கொண்டிருப்பதால் அவசியமில்லாமல் பிறரின் செயல்பாடுகளில் மூக்கை நுழைத்து தமது காலத்தை வீணடிக்கும் தவறான காரியத்தைச் செய்யமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
என்ன? – இனி நாமும் நமது அன்றாடச் செயல்களை மேற்கண்ட நான்கு சதுரங்களாக வரையறுத்து – இரண்டாம் சதுரத்தில் நமது மனதை ஒருமுகப்படுத்தி வெற்றி காண்போமா?
அணியணியாய் இணைய உதவும் அழகிய சதுரங்கம்
நான்காவது சதுரம் நம்மைப் பிணைக்கும் சதுரம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுதலின் அவசியத்தை நமக்கு உணர்த்தும் ஒற்றுமைச் சதுரம்.
கீழ்காணும் சதுரத்தை உற்று நோக்கிடுங்கள். அது என்ன சொல்கிறது என்பது நமக்குப் பிடிபடும். அந்தச் சதுரத்தின் கிடைக்கோடு நமது தைரியத்தைக் குறிப்பதாகக் கொள்வோம். செங்குத்துக் கோடு நமது கருணையைக் குறிப்பதாக கொள்வோம். இந்த இரண்டு கோடுகளை அடிப்படையாகக் கொண்டுஅமையும் நான்கு சதுரங்களை நன்கு கவனிப்போம்.
முதலில் “வெல்ல …. தோற்க….” – என்னும் முதலாம் சதுரத்தை எடுத்துக்கொள்வோம். இதன் பொருள் என்னவெனில் “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” -என்கிற அடிப்படையில் தொடங்கப்படும் முயற்சியை அல்லது நடவடிக்கையைக் குறிக்கும். இத்தகைய மனோபாவம் – விளையாட்டின் போதும், போரின் போதும் காணப்படக் கூடியதாகும். வாழ்க்கைக்கோ, வர்த்தகத்துக்கோ, உறவுமுறைக்கோ ஒத்துவராததாகும். “நான் வெல்ல வேண்டும் நீ தோற்க வேண்டும்” – என்று முனைகிறபோது, அவரிடம் தைரியம் அதிகமாகவும் கருணை மிகவும் குறைவாகவும் உள்ளதென்று பொருள். அதாவது முரட்டுத் தனம் மிகுந்து காணப்படும். வேகம் இருக்கும். ஆனால் விவேகம் இருக்காது. – இத்தகைய நிலை வாழ்க்கையை வசப்படுத்தவும் தலைமை தாங்கவும் உதவாது. “வெட்டு ஒன்று துண்டு ரெண்டு” என நடந்து கொள்ளும் இவர்களைப் பெரும்பாலானோர்க்குப் பிடிக்காமற்போகும். அவரது பேச்சில் பக்குவம் இருக்காது. இவர்களது செயலில் நிதானம் இருக்காது.. இதனால் உறவுகள் இனிமையாய் இருக்காது. இது அதிகாரம் தொனிக்கும் நிலைமையைக் குறிக்கும். “தானே முக்கியமானவன்” – என்னும் தன்மை தொனிக்கும்.
இரண்டாம் சதுரம்: “நான் தோற்கிறேன் நீ வெல்ல” என்பதாகும். அதாவது, “நான் விட்டுக் கொடுக்கிறேன் நீ வெல்ல” – என்னும் மனோபாவத்தைக் குறிக்கும் சதுரமாகும். இப்படிப்பட்ட மனோபாவம் யாருக்கு வாய்க்கும் எனப் பார்த்தால் – யாரிடம் தைரியம் குறைவாகவும் கருணை அதிகமாகவும் இருக்குமோ – அவர்களால் மட்டுமே இப்படித் தன்னைத்தானே விட்டுக்கொடுத்து பிறர் வெல்ல – ஏதுவாக இருக்க முடியும். இது ஒருவரது பலவீனத்தைக் காட்டும் தன்மையாகும். இந்த நிலையில் உறவு ஆரம்பத்தில் இனிப்பது போலத் தோன்றினாலும், நாளாக ஆக, இப்படிப்பட்டவர்கள் புறக்கணிக்கப்படுவர். இவர்களின் மதிப்புக் குறைய நேரும். பிறகு யாருமே கவனிக்கவில்லை, எனக்கென்று யாருமில்லை, என்னால் முன்னேற முடியவில்லை எனப் புலம்ப நேரிடும்.
மேற்கண்ட இரண்டு சதுரங்களையும் சற்றே உற்று நோக்கினால் ஒரு விபரீதம் புரியும். உறவில் சம்பந்தப்பட்ட இருவருள் ஒருவர் – முதல் சதுரத்துக்குச் சொந்தக்காரராகவும், மற்றவர் இரண்டாம் சதுரத்திற்குச் சொந்தக்காரராகவும் இருந்தால் – நடப்பதை யூகித்துப் பாருங்கள்….. அவர், “நான் வெல்வேன்…. நீ தோற்பாய்” என்று களத்தில் இறங்குவார். இவர், “நான் தோற்பேன்…. நீ வெல்வாய்” என்று களத்தில் இருப்பார்.விளைவு என்னாகும்? எந்த வித சுவாரசியமும் இல்லாமல் ஒருவர் வெல்ல மற்றவர் தோற்றுக்கொண்டே இருப்பார். இது ஒருவித (துஷ்பிரயோக நிலைக்குச் சமமாகும்) மிகைப்படுத்துதலுக்குச் சமம்.
மூன்றாவது சதுரம்: “நானும் தோற்பேன் நீயும் தோற்க வேண்டும்” – என்னும் மிகவும் மோசமான மனோபாவத்தைக் குறிக்கிறது. “தனக்கு இரண்டு கண்களும் போனாலும் பரவாயில்லை. அடுத்தவனுக்கு ஒரு கண்ணாவது போக வேண்டும்” – என்னும் பழிவாங்கும் மனோநிலையைக் குறிக்கிறது.
இந்த நிலையை யார் அடைவர் என்றால், இந்த உறவில் சம்பந்தப்பட்ட இருவரும் சதுரம் – 1ல் கூறப்பட்டிருக்கும் “நான் வெல்வேன் நீ தோற்கவேண்டும்” என்னும் நிலையில் இயங்குபவராய் இருப்பர். இறுதியில் இருவருமே தோற்றுப்போகக் கூடும். இவர்களிடம் ஆணவமும், அதிகாரமும், ஆதிக்க மனோபாவமும் மிகுந்து காணப்படும். இவர்களைப் பொறுத்தவரை – எதிரியின் தோல்வியே முக்கியமானது. இவர்களின் தோல்வி என்பது வெகு சாதாரணமாகிப் போகும். இந்த நிலையின் கொடுமையைக் கொஞ்சம் யூகித்துப் பாருங்கள். இந்த நிலை தேவையா என்று எண்ணிப்பாருங்கள்.
நான்காவது சதுரமானது: “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்”-என்னும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருக்கும் உன்னதமான உறவுநிலை. இந்நிலை – ஒத்துழைப்பு நிலையைக் குறிப்பதாகும். இந்நிலை வாழ்வை ஒரு போட்டியாகக் கருதாமல், உடன்பாடாகவும், கூட்டுறவாகவும் கருதும் நிலையாகும். மேற்கண்ட மற்ற நிலைகளெல்லாம் அந்தஸ்து மற்றும் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும். ஆனால் இந்த நிலை “எல்லோர்க்கும் எல்லாமும் பொது” என்னும் பரந்த மனப்பான்மையின் அடிப்படையிலமைந்த பொது உடைமையைக் குறிக்கும் நிலையாகும்.
ஒருவர் வெற்றிபெற வேண்டுமானால் மற்றவர் தோற்றாக வேண்டும் என்னும் எண்ணமற்ற நிலை இது. இது உனது வழியோ எனது வழியோ அல்ல. “இது நமது வழி” என்னும் சமத்துவத்தை சகோதரத்துவத்தை நிலைநாட்டும் உன்னத நிலை!
கூடிவாழ்தல் என்பது சமூக நிலையில் உயர்ந்த நிலை. யாரையும் சார்ந்து வாழும் அடிமை நிலையிலிருந்து விடுபட்டு – இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து, ஒருவரின் திறமையை ஒருவர் மதித்து ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையையோ வர்த்தகத்தையோ இணைந்து நடத்தும் மகத்தான நிலை. இந்நிலையில் ஈடுபட்டிருக்கும் யார்க்கும் ஆனந்தமே மிஞ்சும்.
இவர்களுக்கு தைரியமும் அதிகமாய் இருக்கும். கருணையும் அதிகமாய் காணப்படும். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படாது. இவர்களின் மனம் பக்குவப்பட்டதாய் இருக்கும். ஒருவரால் எப்பொழுது, தனது உணர்வுகளையும், எண்ணங்களையும் தைரியமாக வெளிப்படுத்தும் அதே நேரத்தில் பிறரின் உணர்வுகளையும், மன உறுதியையும் கேட்டுப்புரிந்து கொள்ளும் கருணை உணர்வும் கொண்டிருந்தால் அதுவே பக்குவநிலை எனப்படும். அதுவே மிக உயர்ந்த நிலையும் ஆகும்.
இதில் காணப்படும் “தைரியம்” – என்பது பொன்முட்டைக்கு உத்திரவாதம் தருவதெனினும், “கருணை” – என்பது தொலைநோக்குப் பார்வையில், சம்பந்தப்பட்ட அனைவருக்குமான வளத்துக்கும் வழிவகுக்கும் குணமாகும். இந்த இரண்டின் அடிப்படையில் அமையும் தலைமையானது – அனைவரின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தவல்லது என்பதில் ஐயமேதுமில்லை.
ஆகவே நாமெல்லோருமே “நானும் வெல்வேன் நீயும் வெல்வாய்” – என்னும் பொது வெற்றியை நோக்கிப் புறப்படுவோம். விரைவில் நம் தேசத்தை வல்லரசாக்கும் இந்த வழியில் நடந்து நம் கனவை நாமே நனவாக்குவோம்.
முரண்பாடுகளைத் தீர்த்து வைக்கும் உடன்பாட்டு உன்னதம்
கீழ்காணும் சதுரத்தைக் கூர்ந்து நோக்குங்கள்
(நான்) நெருங்க
(நீ) விலக
(1) (நான்) நெருங்க
(நீயும்) நெருங்க
(2)
(நான்) விலக
(நீயும்) விலக
(3) (நான்) விலக
(நீ) நெருங்க
(4)
வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் ஒருவருக்கு மேற்பட்ட நபர் இணைந்து செயல்படும் எந்தச் சூழ்நிலையானாலும் சரி. (அது குடும்பமாக இருக்கலாம், அலுவலகமாக இருக்கலாம், பொது இடமாக இருக்கலாம், சமூகமாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், தொழிற்கூடமாக இருக்கலாம்) அங்கெல்லாம் இருவருக்கிடையிலோ, பலருக்கிடையிலோ கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். கருத்து வேறுபாடுகளுக்கான காரணங்கள் பற்பல. வயது வேறுபடலாம், அனுபவம் வேறுபடலாம், விருப்பம் வேறுபடலாம், தேவையும் இலக்கும் வேறுபடலாம். மொழி, மதிப்பீடு, நம்பிக்கை வேறுபடலாம். அணியாக இயங்கும்போது அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகள் தோன்றுதல் தீர்க்கப்படாவிடில் அந்தக் கருத்து வேறுபாடு விசுவரூபம் எடுத்து – அணியின் செயல்பாடுகளுக்கே பங்கம் விளைப்பதாக ஆகி விடும்.
கருத்து வேறுபாடுகள் நீடிக்குமானால் நாளடைவில் அது பூதாகாரமாக வெடித்து – குடும்ப உறவுகள் சிதைந்து போகவோ, நிர்வாக உறவு சீர்கேடு அடையவோ, ஒரு விளையாட்டு அணியின் செயல்வேகம் பாதிக்கப்படவோ, ஒரு இசைக்குழுவின் திறமை வெளிப்படாமல் போகவோ வாய்ப்புகள் உண்டு. அது மட்டுமல்ல – இவர்களின் இலக்குகளை எட்ட முடியாமலும் இலட்சியத்தை அடைய முடியாமலும் போவதோடு – மனித உறவுகளும் சின்னா பின்னமாகிப் போய்விடக் கூடும்.
இப்படிப்பட்ட நிலை வருமுன்னர் காப்பதுதான் – மனிதவளத்தின் மேம்பாட்டுக்கு உதவும் உயரிய செயலாகும். அதுவே நமது வாழ்நிலை மேம்பாட்டுக்கான அடிப்படைத் தேவையுமாகும்.
முதல் சதுரத்தைக் காண்போம்: கருத்து வேறுபாடு கொண்ட இருவரோ அல்லது இரு குழுவோ இப்படி செயல்படக்கூடும். ஒரு சாரார் (ஒருவர்) இணக்கத்தை நாடி வரும்போது மறுசாரார் (மற்றொருவர்) பிணக்கம் கொண்டு உறவை மறுக்கும் சூழ்நிலையை – இது குறிக்கிறது. ஒருவர் அனுசரிக்கும்போது மற்றவர் வீம்பு செய்து விலகிச் செல்லும் நிலை. இதைத்தான் தமிழில் “கெஞ்சினால் மிஞ்சுவது” – என்பார்கள். ஒருவர் அனுசரிக்க மற்றவர் ஆணவத்தோடு விலகும் நிலை – கருத்து வேறுபாட்டை வளர்த்து உறவின் முறிவுக்கு இட்டுச்செல்லும். இந்த அவலநிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும்.
இரண்டாம் சதுரம்: ஒருவர் விலகிச் செல்லச் செல்ல மற்றவர் நெருங்கி நெருங்கி வந்து இணக்கத்தை உருவாக்க முயலும் நிலை. ஒருவர் விட்டுக்கொடுக்கும் இந்நிலை நல்லது என்றாலும் இதுவும் நிலைபெறாது. பிறரை வசப்படுத்துவதுதான் சிரமமான காரியம். நாமே வம்பு செய்து கொண்டிருந்தால் – நமது கருத்து வேறுபாட்டை வேறு யார் வந்து தீர்ப்பர்? எனவே கருத்து வேறுபாட்டால் ஏற்படவிருக்கும் அவல நிலையை உணர்ந்து நாம் நமது அபரிதமான தன் முனைப்பை , ஆணவத்தை சற்றே ஒதுக்கிவிட்டுப் பிறரின் கருத்துக்குக் காது கொடுக்கத் தயாராகி விட்டாலே மனதை ஆட்டுவிக்கும் கருத்து வேறுபாடு குறையவும் – உறவுநிலை மேம்படவும் வாய்ப்பு பிரகாசமாகும். அதை விடுத்து – நமது ஆணவத்தின் காரணமாய்ப் பிறருக்குப் புத்திபுகட்ட நினைத்தால் – இழப்பு நமக்குத்தான். மாறாக விட்டுக் கொடுத்து உறவாடினால் பலன் இருவருக்கும் ஏற்படும் என்பதை மறக்கக்கூடாது. இருவருக்கும் இன்பம் உண்டாகும் நிலையே உயர்நிலை.
மூன்றாம் சதுரம்: “ஒருவர் விலகிச் செல்ல, அடுத்தவரும் விலகி செல்வது!” இந்தச் சதுரத்தில் குறிப்பிடப்படுகிறது. இருவருமே விலகிச் செல்லும் மனோபாவம் – இணக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகளை அடியோடு தகர்த்துவிடும். இந்த நிலை ஒரு அணியில் முழுவதும் விரும்பத் தகாத நிலை. சம்பந்தப்பட்ட இருவரில் யாரேனும் ஒருவருக்காவது நெருங்கும் விருப்பம் இருந்தால் மூன்றாம் நபரின் தலையீட்டால் இணக்கம் ஏற்படும் சூழலை உருவாக்க முடியும். ஆனால் இருவரும் விலகிச் செல்ல முற்படும்போது அதுவே முரண்பாட்டின் மொத்தமாகக் காட்சியளிக்கும். உடன்படுவதற்கான வாய்ப்பை இது முழுவதுமாகக் கெடுத்துவிடும். எனவே இந்நிலை தவிர்க்கப்பட வேண்டியதாகும். இன்னும் சொல்லப் போனால் இத்தகைய நிலையே ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வதுதான் உகந்தது.
நான்காம் சதுரமாகிய “நெருங்க….. நெருங்க….” – என்றும் நிலை மிகவும் மேம்பட்ட நிலை, உன்னத நிலை. இது இருவரின் பக்குவ நிலையைப் பறை சாற்றும் நிலையாகும். ஏதோ ஒரு சூழலால் அல்லது சந்தர்ப்பத்தால் – மனதளவில் – முரண்பாட்டுக்கு ஆளான இருவரும், பிறகு சிறு கால அவகாசத்தில், அதற்கும் மேலே ஒரு படிபோய்… “நான் நெருங்கி வருகிறேன்…” என்று இருவரும் இணைவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு உறவுப் பிணைப்புக்கான – பாலத்தை உருவாக்குதலில் தம்மை ஈடுபடுத்திக்கொள்வர். இத்தகையவர்களால் ஒரு குடும்பமோ, நிர்வாகமோ, இயக்கமோ – தனது இலக்கை அடையும் திசையில் பீடு நடைபோட்டு மகத்தான வெற்றியடையும். அந்த அணியில் எப்போதும் உள்ளார்ந்த மகிழ்ச்சியும் ஊக்கமும் உற்சாகமும் நிலைத்திருக்கும்.
எனவே வாழ்க்கை என்னும் சதுரங்கத்தில் முன்னர் குறிப்பிட்ட 1, 2, 3 என்னும் மற்ற மூன்று சதுரங்களும் ஒத்துழையாமைக்கும், ஒற்றுமையின்மைக்கும் வழி வகுத்து – தனது நோக்கத்திலிருந்து ஓர் இயக்கம் வழுவி விடுவதற்கான கூறுகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பவை. விரும்பத்தகாதவை.
மாறாக, நான்காம் சதுரமாகிய “நெருங்க…. நெருங்க….” – என்னும் சதுரமோ – அனைவரும் ஒருங்கிணைந்து – ஒட்டுமொத்த சக்தியையும் பிணைத்து – பொது இலக்கை நோக்கி – ஒருமனதாக இயங்கி, குறித்த காலத்தில், குறித்த செலவில், பயணித்து வெற்றிக் குறியீட்டை எட்டுவதோடு – அனைவரின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கைக்கும் – உயர்வுக்கும், மனிதகுல மேம்பாட்டுக்கும் உதவிடும் ஒப்பற்ற- உயரிய – பக்குவ நிலையாகும்.
இந்நிலையே இனிய நிலையாகும். இதுவே கூடிவாழும் – குடும்பமும், நிறுவனமும், தொழிலகமும், எந்த அணியும் – வெற்றிபெறப் பேருதவி புரியும் அற்புதமான நிலையாகும்! முயன்று – இந்நிலை பெற்று இனிமை காணலாமே!
எழுச்சிமயமான நிலையை எடுத்தியம்பும் சதுரம்
நம் குடும்பத்திலோ, நிறுவனத்திலோ, இயக்கத்திலோ – நம்மோடு இணைந்து இயங்கும் நபர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து – அவர்களின் செயல்திறன் முழுமையாக வெளிப்படவும், செய்நேர்த்தி மேம்படவும் – நாம் புரிந்துகொள்ள வேண்டிய கூறுகளை இந்த ஆறாம் சதுரம் எடுத்து முன்வைக்கிறது.
பெரிய சதுரத்தின் உள்ளே நான்கு சிறிய சதுரங்களைக் காண்கிறீர்கள் அல்லவா…. அவற்றை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்துகிறேன்.
சதுரம்:
1 திறமை இருந்து – அதனை வெளிப்படுத்தும் விருப்பமும் கொண்டு, செயலாற்றும் நபர்களை உள்ளடக்கிய சதுரம் இது. இப்படிப்பட்டவர்கள் நிறைந்த சூழல்தான் செய்நேர்த்தி மிக்கதாக அமைந்திருக்கும். இவர்களின் உற்பத்தித் திறன் முழுமையாக வெளிப்படும். இவர்கள் நிறைந்த இடத்தில் வேலைகள் எளிதில் நிறைவேறும். குழப்பமோ குதர்க்கமோ இருக்காது. மனித உறவுகள் மேம்பட்டு மகிழ்ச்சி நிறைந்த இடமாக இது காட்சியளிக்கும். இன்னும் சொல்லப் போனால் மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொள்ளும் இடமாக இது ஒளிரும்.
இதை “ஆக்கநிலை” என்பேன். இது மயக்கமோ, தயக்கமோ, தேக்கமோ இல்லாத நிலையே ஆகும். இதுவே அனைவராலும் விரும்பத்தகுந்த உன்னத நிலையாகும்!
சதுரம்: 2
இந்த சதுரத்திற்குள் இடம் பிடிப்பவர்கள் விருப்பமுள்ளவர்கள். ஆனால் திறமைக் குறைபாடுள்ளவர்கள். இவர்கள் கவலைக் கிடமானவர்கள் அல்ல. காரணம் – இவர்களின் மனோபாவம் தயார் நிலையில் உள்ளது. தடையாக இருப்பது போதுமான பயிற்சியின்மைதான். இவர்களின் திறமை பளிச்சிட வேண்டுமெனில், அவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்க வேண்டும்.
இவர்கள் விருப்பமுள்ளவர்களாக விளங்குவதால், பயிற்சி பெற்றுத் தேர்வதில் வேறு எந்தச் சிக்கலும் இருக்காது. இவர்கள் போதிய பயிற்சி எடுத்துக் கொண்டால் தேக்கநிலை மாறி – உற்பத்தித்திறன் உயரும்.
ஊக்கம் மிகுந்த இவர்களுக்கு – உரிய பயிற்சிகளை மட்டும் முறையாகக் கொடுத்து விட்டால் – அவ்விடத்தின், அத்தொழிலின், அவ்வுறவின் மதிப்பு உயரும்.
சதுரம்: 3
இந்தக் குட்டிச் சதுரத்தில் குவிந்திருப்பவர்கள் திறமையுள்ளவர்களாக இருப்பார்கள், திறமைக்கான போதிய பயிற்சியைப் பெற்றிருப்பார்கள். அந்தத் திறமையில் தேர்ச்சியும் பெற்றிருப்பார்கள் இருந்தும் அதனை வெளிப்படுத்தி – பயன் விளைக்கத் தயாராய் இருக்க மாட்டார்கள். காரணம் என்னவெனப் பார்த்தால் அவர்கள் மனதில் செயலாற்றும் விருப்பம் இருக்காது. விருப்பமின்மை ஏன் ஏற்படுகிறது என்பது பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய விஷயமாகும். போதிய சம்பளமோ, போதிய பாராட்டோ, போதிய அங்கீகாரமோ, போதிய இட வசதியோ, போதிய வெளிச்சமோ, போதிய காற்றோட்டமோ போதிய உபகரணமோ – பல நாட்களாக சரிசெய்யப்படாத மனித உறவோ ஒருவரின் விருப்பமின்மைக்குக் காரணிகளாக அமையலாம். அவற்றை அறிந்து, பட்டியலிட்டுப் பகுத்துப் பார்த்து ஆய்ந்து – நிவர்த்திசெய்ய முற்பட்டால் அத்தகைய நபர்களின் மனக்குறையை நீக்கி, அவர்களை பயன்மிக்க உற்பத்தியாளர்களாக மேம்படுத்திக் காட்டமுடியும். அவர்கள் பயன்பாடு மிக்கவர்களாக மாறுகிறபோது அவர்களின் மதிப்பு மட்டுமல்ல அவர்கள் பணிபுரியும் நிறுவனத்தின் மதிப்பும், சமூக மதிப்பும் கூடி விடுகிறது என்பதுதான் உண்மை.
விருப்பம் இல்லையென்றால் செயலில் மனம் வைக்க மாட்டார்கள். இந்நிலை உயர்வுக்கு உதவாது. இந்தத் தயக்க நிலையை உணர்ந்து தீர்வு காண முயல வேண்டும். நமது கவனம் அந்தச் சதுரத்தில் குவிய வேண்டும். ஏனெனில் இப்படிப்பட்டவர்களால் மற்ற நபர்களின் மனமும் பாதிக்கப்படும். விளைவு அனைவரின் செயல்பாடும் குறைந்து – நோக்கம் வீழ்த்தப்படும்… விளைவுகள் விபரீதமானவையாய் மாறும்.
சதுரம்: 4
இந்தச் சதுரம் ஒரு சதுப்பு நிலம் மாதிரி. இவர்களிடம் திறமையும் இருக்காது. திறமையை வளர்த்துக் கொள்ளவோ, வெளிப்படுத்தவோ மனதில் விருப்பமும் இருக்காது. திறமையோ, விருப்பமோ – இரண்டும் இல்லாது போனால் ஒருவனால் எப்படி இயங்க முடியும்? அவனது வாழ்க்கை எப்படி இனிக்கும்? – இந்த நிலை மயக்க நிலையாகும். இவர்களின் மயக்க நிலை நீங்க வேண்டுமெனில் நாம் பெரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
நேர்மறையான எண்ணங்களை இவர்களின் நெஞ்சில் வளர்த்து போதுமான ஊக்க உணர்வுகளைப் புகட்டி தேவையான பயிற்சிகளை முறையாகக் கொடுக்கத் திட்டமிட்டால் இவர்களும் பயன்பாடுமிக்கவர்களாக, நிறுவனத்தின் மதிப்பை மேலும் உயர்த்துபவர்களாக மாறுவார்கள். மனிதவளமென்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட இனிமையான அனுபவமும் நமக்குக் கிடைக்கும். அல்லது இவர்கள் பட்ட மரங்களாகவும் இவர்கள் வாழும் இடம் சதுப்பு நிலங்களாகவும் மாறிவிடக் கூடும். அன்பு காட்டிப் பயிற்சி கொடுத்தால் நாளடைவில் நலம் விளையும்.
மேற்கண்ட சதுரங்களில் – எந்த சதுரத்திற்குள் இடம் பிடித்தால் மனிதர்கள் மேன்மை மிகு சூழலுக்கு உதவுவார்கள் என்பது உற்றுநோக்கத்தக்கது.
முதல் சதுரமே முத்தாய்ப்பான சதுரம். ஏனெனில் அது ஆக்கும் வல்லமை பொறுத்தது.
இரண்டாவது சதுரமோ ஊக்கமிருந்தும் தேக்க நிலையிலிருப்பது. பொருத்தமான பயிற்சியின் மூலம் இந்தத் தேக்க நிலையை மாற்றி ஆக்க நிலைக்குக் கொணர முடியும். கொணரவும் வேண்டும்.
மூன்றாவது சதுரமோ திறமையிருந்தும் விருப்பமின்மையால் இது தயக்க நிலைக்கு வித்திடும். இந்நிலை தவிர்க்கப்பட வேண்டுமெனில், போதுமான ஊக்க சக்தி புகட்டப்பட வேண்டும். உளவியல் ரீதியான அணுகுமுறைகளின் மூலம் மனோபாவ மாற்றத்திற்கு அடிகோல வேண்டும்.
நான்காவது சதுரமோ இயக்கமற்ற மயக்கநிலையைக் குறிப்பதாகும். இவர்களுக்குத் தேவை விழிப்புணர்வு. முறைப்படியான உளவியல் மற்றும் தொழில்நுட்பப் பயிற்சிகளின் மூலம் மட்டுமே இவர்களைக் கடைத்தேறச் செய்ய முடியும்.
இப்படி வகைப்படுத்திப் பார்த்தால் – மனித வளத்தைப் பொருத்தமாக, துரிதமாக, துல்லியமாகப் பயன்படச் செய்து மானுட மதிப்பை மேம்படுத்தப் பெரிதும் துணைபுரிவதாய் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை.
இலக்கை அடைய வைக்கும் எளிய சதுரம்
ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு கனவிருக்கிறது. அல்லது இருப்பது அவசியம். கனவென்பது வேறல்ல அது ஒரு தொலைநோக்கு. ஆமாம் அது ஒரு தொலைக்காட்சி. நாளை நடக்க இருப்பதை இன்றே மனதில் காணும் காட்சி. இதைத்தான் ஆங்கிலத்தில் “ Vision “ என்றும் “Picture” என்றும் “Dream” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
“ Begin with the end in mind “ என்று ஒரு மேலாண்மை கோட்பாடு கூறுகிறது. “முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மனதில் நிலைநிறுத்திக் கொண்டு ஒரு செயலை தொடங்க வேண்டும்” என்பது இதன் பொருள். அந்த இறுதிக்கட்டத்திற்குப் பெயர் தான் “ Vision”. இந்த “ Vision” ஐ அடைவதற்கு ஒருவர் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும், பல்வேறு படிநிலைகளைக் கடக்க வேண்டும், பல நாட்கள் காத்திருக்க வேண்டும்.
கனவை நினைவாக்குதல் என்பது கடைசி நிலை. அந்த கடைசி நிலையை அடைய வேண்டுமென்றால் பல இடைநிலைகளைக் கடந்தாக வேண்டும். அந்த இடைநிலைகளை மைல்கற்களால் அடையாளம் காட்டலாம். அந்த மைல்கற்களே “இலக்குகள்” எனப்படும்.
“இலக்கில்லா வாழ்க்கை கிழக்கில்லா வானுக்குச் சமம்” – என்பேன். இலக்குகள் தான் மனிதனை சிறிது சிறிதாக முன்னேறச் சொல்வது. இலக்கு இருக்கும் போதுதான் மனித மனம் ஓரிடத்தில் குவிகிறது. இல்லையென்றால் அது சிதறிப் போகிறது. கவனம் சிதறிவிட்டால் மனிதனால் உயரங்களை எட்ட முடியாது. இலக்கே இல்லாமல் இருவரால் தான் இருக்க முடியும். ஒருவர் மெய்ஞானி மற்றொருவர் அஞ்ஞானி. எல்லாம் அறிந்த ஞானியருக்கு இலக்குகள் எதுவும் தேவையில்லை, அவர்கள் இலக்குகளை கடந்த நிலையை எய்தியிருப்பார்கள். அவர்கள் மனமற்றதன்மையை அடைந்திருப்பார்கள். அதே போன்று ஏதும் அறியாது அறியாமையில் முடங்கி கிடப்போரிடமும் இலக்குகள் இருக்காது. இந்த இரண்டு நிலைக்கும் இடையில் ஆட்பட்டு மனித நிலையில் வாழ்வோர்க்கு இலக்குகள் தான் ஏணிப்படிகள். அப்படிப்பட்ட இலக்குகளை அடைவதற்கு நான்கு முறைகொண்ட ஒரு சுழற்சி வட்டத்தை இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
மேலிருக்கும் சதுரத்தை உற்று கவனியுங்கள்
குறித்த இலக்கை குறித்த நேரத்தில் அடைவதற்கு முறையான ஒரு வழிமுறையை கடை பிடித்தல் அவசியம். இல்லையென்றால் அந்த இலக்கை அடைவது கடினம்.
அந்த வழிமுறைநான்கு நிலைகளைக் கொண்டது
1. திட்டமிடுதல் - Plan
2. செயல்படுதல் - Do
3. சரிபார்த்தல் - Check
4. சரிசெய்தல் - Act
முதலாவதாக “திட்டமிடுதலை” பார்ப்போம். நம்மில் எத்தனைபேர் திட்டமிடுகிறோம்? நம்மில் எத்தனைபேரிடம் இலக்கிருக்கிறது? நம்மில் எத்தனை பேரிடம் கனவிருக்கிறது? (சற்றே உங்களை நீங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்விகள் இவை). ஒருவரிடம் உள்ள கனவுதான் அவர்கள் வாழ்க்கைக்கு பொருள் சேர்க்கிறது. கனவுகளே இல்லாத இலக்குகள் முழுமை பெறாது. அதேபோன்று இலக்குகள் ஈடேற வேண்டுமென்றால் திட்டம் அவசியம்.
எது திட்டம்?
எது - அது?
எவர் - அவர்?
எப்பொருள் - அப்பொருள்?
எவ்விடம் - அவ்விடம்?
எப்பொழுது - அப்பொழுது?
எம்முறை - அம்முறை?
எவ்வளவு - அவ்வளவு?
- என்று தீர்மானித்துக் கொள்வதையே “திட்டம்” என்கிறோம். செய்யவிருக்கும் செயல் எது? அந்தச் செயலை யார்யாரைக் கொண்டு செய்யப் போகிறோம்? அந்தச் செயலைச் செய்து முடிக்க எவ்வளவு பொருள் தேவைப்படுகிறது? அந்தச் செயல் செய்வதற்கு பொருத்தமான இடம் எது? அந்தச் செயலை மேற்கொள்வதற்கு உரிய நேரம் எது? அந்தச் செயலை எந்த முறையில் செய்ய விரும்புகிறோம்? செய்ய விரும்பும் அந்தச் செயலின் அளவு (Size of the project) எவ்வளவு? – என்பதையெல்லாம் தீர்மானிப்பதற்குப் பெயர்தான் திட்டமிடுதல் ஆகும்.
வீட்டின் வரவு செலவுத் திட்டம், ஒரு திருமணத்தை நடத்தி முடிப்பதற்கான திட்டம், ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதற்கான திட்டம், ஒரு புதிய தொழிலைத் தொடங்குவதற்கான திட்டம் – என செய்ய விரும்பும் ஒவ்வொரு செயலுக்கும் நாம் திட்டமிடமுடியும். அதை காலத்தின் அடிப்படையிலும் வரையறைசெய்யலாம். ஒரு வாரத்திட்டம், ஒரு மாத கால திட்டம், ஓர் ஆண்டுத் திட்டம், மூவாண்டுத் திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம், 20 ஆண்டு காலத் திட்டம் என குறுகிய கால மற்றும் நீண்ட கால திட்டங்களாகவும் செயலுக்கேற்ப அமைத்துக் கொள்ளலாம்.
இரண்டாவதாக நாம் மேற்கொள்ள வேண்டியது “செயல்படுதல்”. செயல்படுதல் என்பது நாம் எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பதைப் போல எளிதானது அல்ல. முதலில் அதற்கொரு திட்டம் தேவை. திட்டமற்றசெயல்பாடு பெரும்பாலும் தோல்வியில் முடியக்கூடும். அது மட்டும் அல்ல நேரமும், பொருளும், மனித ஆற்றலும் விரையமாகக் கூடும். அப்படிப்பட்ட செயல்களால் ஏற்படும் பயனைவிட இழப்புக்களே அதிகம். எனவே எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுத் தொடங்கினால் வெற்றி நிச்சயம். திட்டமிட்டு தொடங்கும் செயல் 50 விழுக்காடு வெற்றி பெற்றதாகவே பொருள் படும்.
திட்டமிடுதலுக்கும் செயல்படுத்தலுக்கும் அடிப்படையில் ஒரு வேறுபாடு உண்டு. திட்டமிடுதலும் ஒரு செயல் தான் என்றாலும் அது மனம் சார்ந்தது. ஆனால் செயல் என்று வரும்போது அது உடல் உழைப்பையும் பிறரோடு உறவாடும் திறமைகளையும் சார்ந்து இருக்கிறது. மேலும் ஒவ்வொரு செயலையும் செய்வதற்கென்று ஒரு செய்முறைஉண்டு. அதன்படி செய்தால் தான் அந்த செயல் முழுமை பெறும்.
“வெல்டிங்” செய்வதற்கென ஒரு முறைஉண்டு. சமையலுக்கென ஒரு முறைஉண்டு. ஓவியம் வரைவதற்கென்று ஒரு முறை, கட்டிடம் கட்டுவதற்கென்று ஒரு முறை. விமானம் ஓட்டுவதற்கென ஒரு முறைஉண்டு. விவசாயம் செய்வதற்கென்று ஒரு முறைஉண்டு. இப்படிச் செய்தொழில் ஒவ்வொன்றும் வெவ்வேறு முறைகளை கொண்டிருக்கிறது. ஒன்றைச் சிறப்பாகச் செய்பவரால் மற்றொன்றைச் சிறப்பாகச் செய்ய முடியாமல் போகலாம். இது இயற்கையானது. விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள அஷ்டாவதானிகளும், தஸாவதானிகளும் – பல செயல்களை ஒரே நேரத்தில் சரியாகச் செய்ய பழகியிருப்பர்.
எனவே ஒரு முறையாகச் செயல்பட வேண்டுமெனில், சோம்பல் கூடாது. அலட்சியம் கூடாது; அவசரம் கூடாது. ஒருவரைப் பார்க்க உகந்த நேரம் எது? முடியாது எனச் சொல்லும் ஒருவரிடம் சம்மதம் பெறுவது எப்படி? ஒருவரைச் சந்திக்கச் செல்லும் போது அவர் அங்கு இல்லையென்றால் அடுத்து என்ன செய்வது? நேரத்தை எப்படி முறையாகப் பயன்படுத்துவது? – போன்றபற்பல கலைகளிலும் தேர்ச்சிபெற்றால்தான் செயல்பாட்டில் வெல்ல முடியும். பலரின் முயற்சிகள் தோற்பதன் காரணம் – இந்தக் கலைகளில் தேர்ச்சி இன்மையே.
கூடுதல் உழைப்பு, நேர்மை, பிறரைப் புரிந்துகொள்ளுதல், பொறுமை – போன்றபல நற்பண்புகள் இருந்தால் செயல்பாட்டில் சிறக்க முடியும்.
மூன்றாம் நிலை “சரிபார்க்கும்” நிலையாகும். சரி பார்ப்பதற்கென நேரம் ஒதுக்க வேண்டும். திட்டமும் செயலும் ஒத்துப்போகிறதா எனப் பார்க்க வேண்டும். வாரம் ஒரு முறையோ, மாதம் ஒரு முறையோ சரிபார்க்க வேண்டும். தினமும் கூட அதைச் செய்யலாம். திட்டத்தின்படி செயல் நடைபெறவில்லையென்றால் காரணங்களை ஆய்ந்து அறிய வேண்டும். ஒரு செயல் – குறித்த நேரத்தில் முடியாவிட்டால் – அது எதனால் நேர்ந்தது என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் நாம் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்பதை அறிய முடியும். அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட பரிசீலனைதான் நமது முன்னேற்றத்தைத் துரிதப்படத்த உதவும்.
நாம் தற்சோதனை செய்து கொள்ளாவிட்டால், நம்மை நாமே தணிக்கை செய்து கொள்ளாவிட்டால், நாம் எங்கிருக்கிறோம்! என்னும் நிலையே தெரியாமல் போய்விடும். விளைவு, நம்மை பாதாளத்தில் தள்ளிவிடும். எனவே… நம்மை நாம் அறிந்து கொள்ள உதவும் கட்டம் தான் “சரிபார்க்கும்” கட்டம்.
திட்டத்திற்கும் – செயலுக்கும் இடையில் உள்ள இடைவெளிகளை, நிறைகுறைகளைக் கண்டறிந்துவிட்டால் அவற்றைப் பட்டியலிட்டு, ஒவ்வொன்றாகச் சரி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இத்தகைய முயற்சிகளை உடனுக்குடன் மேற்கொண்டுவிட்டால் பெரிய தாமதங்களையும் – அதனால் ஏற்படும் இழப்புக்களையும் தவிர்த்துவிடலாம்.
இப்படிச் சரிபார்க்கும்போதுதான் – நாம் இட்ட திட்டத்தின் குறைபாடுகளும் நமக்குப் புரியும். அனுபவக் குறைவால் ஏற்பட்டிருக்கும் ஏற்றத்தாழ்வுகளும் நமக்குத் தெரிய வரும். எனவே இந்தப் புள்ளிவிபர அடிப்படையில் – நமது திட்டத்தையே மறுபரிசீலனைக்குட்படுத்தி உரிய மாற்றத்தைச் செய்து கொள்ளலாம். திட்டத்தில் உரிய மாற்றம் செய்து கொண்டால் – அதனை நிறைவேற்றுவதில் முரண்பாடு இல்லாமல் முறையாக , முழுமையாக நிறைவேற்றமுடியும்!
இப்படியாக இந்த நான்கு நிலைகளைக் கொண்ட வட்டத்தை, நாம் எடுத்துக்கொண்ட இலக்கு நிறைவேறும் வரை அடிக்கடி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் சரிபார்த்து, நிலைமை சரிசெய்யப்பட வேண்டும். அப்படி இடைவிடாமல் பரிசோதனை செய்து கொண்டால் திட்டத்திற்கும் – செயல்பாட்டிற்கும் இடைவெளி நேராமல். குறித்தபடி இலக்குகளை எட்ட முடியும்…. அது தானே நமது நோக்கமும் கூட.
ஊக்கத்திலிருந்து ஞானத்திற்கு
டீக்கடை பெஞ்ச்சிலும் சரி பாராளுமன்றத்திலும் சரி பேசப்படும் செய்திகளை கூர்ந்து நோக்கினால் ஒன்று தெளிவாகப் புலப்படும். நம் நாட்டின் நிலவரம் சரியில்லை என்பதுதான் அது! ஒரு புறம் அரசியல்வாதிகளின் போக்கு சரியில்லை என்கிறார்கள். மறுபுறம் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சரியில்லை என்கிறார்கள். மற்றொருபுறம் பொதுமக்கள் விழிப்புணர்வின்றி செயல்படுவதாக குற்றம் சுமத்துகிறார்கள். மேலும் பல விவாத மேடைகளில் பெற்றோர்களும் பிள்ளைகளும் குற்றம் சுமத்தப்படுகிறார்கள். இளைஞர்களும் யுவதிகளும் பழிக்கப்படுகிறார்கள்.
ஒட்டு மொத்தமாகச் சொல்வதென்றால் நம்மை நாமே குறைகூறிக் கொண்டிருக்கின்றோம்! என்னுடைய கேள்வி என்னவென்றால் “நாம் எல்லோருக்குமே குறைகள் தெளிவாகத் தென்படுகின்ற போதும் நம்மால் ஏன் அவற்றை நிறை செய்ய முடியவில்லை?” என்பதுதான்!
மகான்களும் பெரிய தலைவர்களும் காலம்காலமாக சரியான செய்திகளை நமக்கு சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் நம் மக்களின் வாழ்வில் ஏன் விரும்பத்தகுந்த மாற்றங்கள் விரைவாக நிகழவில்லை என்பது நியாயமான ஆதங்கமாகவே இருந்து வருகிறது.
இதற்கான காரணத்தையும், நாம் செய்ய வேண்டிய காரியத்தையும் இந்த படிநிலைகள் தெளிவாக்கவிருக்கின்றன. வாசித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் மாற்றம் காண்பீர்கள்.
மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.
அந்த நான்கு நிலைகள்:
1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல்
முதலில் அறிதலைப் பார்ப்போம்
எந்த ஒரு புதிய தகவலோ கருத்தோ செய்தியோ பொருளோ ஒருவருக்கு வெளியிலிருந்துதான் முதலில் அறிமுகமாகின்றது. ஒரு மனிதர் மூலமாகவோ. காட்சி மூலமாகவோ. சம்பவத்தின் முலமாகவோ. செய்தித்தாள், புத்தகம், தொலைக்காட்சி, கடிதம், இணையதளம், வானொலி, கருத்தரங்கம் என எண்ணற்ற ஊடகங்களின் வாயிலாகவே ஒன்றை நாம் அறிய நேருகிறது. சுருக்கமாகச் சொன்னால் அறிதல் என்பது வெளியிலிருந்து பெறப்படுவது. இப்படி வெளியிலிருந்து பெறப்படும் ஒன்றால் மனித மனதில் மாறுதல் உடனடியாக நிகழ்ந்துவிடுவதில்லை. ஏனென்றால் யாரோ சொன்னதலிருந்தும் எங்கோ கேட்டதிலிருந்தும் நமக்குள் ஏற்படும் தாக்கங்கள் அழுத்தமாகவோ ஆழமாகவோ பதிவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றங்கள் நிகழ்வது அரிதுÐ
இரண்டாம் படியாகிய “புரிதலை” எடுத்துக் கொள்வோம்.
மேற்கண்ட பல வழிகளின் மூலம் நாம் பெற்ற அறிவை நமக்குள் சுழலவிட்டுச் சிந்தித்துப் பார்ப்பதையே நாம் “புரிதல்” என்கிறோம். “எண்ணிப் பார்த்தல்” என்றும், “யோசித்தல்” என்றும், “அலசி ஆராய்தல்” என்றும், நடைமுறையில் கூறப்படுவதையே “சிந்தித்தல்” என்கிறோம். ஒரு கணிப்பொறியைப் பற்றி நாம் அறிந்து கொண்டோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த கணிப்பொறி எனக்கு எந்தெந்த வகையில் பயன்படும்? அது இப்போது எனக்கு தேவையா? அதை வாங்கிக் கொள்ள எவ்வளவு பணம் தேவை? அதை வாங்குவதால் உடனடி இலாபம் உண்டா? என சிந்தித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவதையே “புரிதல்” என்கிறோம்.
சுருக்கமாக சொன்னால் “புரிதல்” என்பது உள்ளுக்குள் நிகழ்வது. ஒரு நபரின் மனதுக்குள் நிகழ்வது. ஒரு மாற்றத்தை உருவாக்குவதில் புரிதல் என்பது இரண்டாம் நிலையை வகிக்கிறது. ஒன்றை அறிந்த நிலையைக் கடந்து, புரிந்த நிலைக்கு வரும் போது ஓரளவு மாற்றங்கள் நிகழக்கூடும். ஆனாலும் மாற்றம் கட்டாயம் நிகழ்ந்துவிடும் என்று சொல்வதற்கு இல்லை. ஏனென்றால் அன்றாட வாழ்வில் எத்தனையோ கருத்துக்களை புரிந்து கொண்டவர்கள் கூட நடைமுறையில் மாறுவதில்லை!
புகைப்பது தவறு புகைப்பதால் புற்று நோய் வரும் சாத்தியக் கூறு அதிகம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்பவர்களால் கூட புகைப்பதை நிறுத்த முடிவதில்லை என்பது கண்கூடு. எனவேதான் புரிதலையும் கடந்து, அதற்கு நாம் அடுத்த நிலையை நோக்கி நகர வேண்டும்.
மூன்றாம் படியாகிய “உணர்தல்” பற்றி அறிவோம்.
ஒன்றை அறிந்து கொண்டு அதைப் புரிந்து கொண்ட பின்னர் அதைச் செயல் வடிவில் செய்து பார்த்து, அதனால் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பெறப்படுவதையே உணர்தல் என்கிறோம்.
சர்க்கரை என்று பிறர் சொல்லக் கேட்பது “அறிதல்” ஆகும். இதை உண்டால் இனிய சுவை கிடைக்கும் என்று சிந்தித்தால் அதை “புரிதல்” என்கிறோம்.
அந்த சர்க்கரையை எடுத்து நாவில் வைத்து ருசித்துப் பார்த்தால் கிடைக்கும் அனுபவத்தையே “உணர்தல்” என்கிறோம். அதே போன்று ஒரு கருத்தை (அ) கோட்பாட்டை நடைமுறைப் படுத்திட அதனால் கிடைக்கும் அனுபவம் நமக்குள் அழுத்தமான பதிவை ஏற்படுத்தும். ஒரு சிலரால் நடைமுறைப்படுத்தி பார்க்காமலே கூட கற்பனையாலேயே அடுத்து வரவிருப்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஒரு கணிப்பொறியை அறிந்து கொள்வதோடு விட்டுவிடாமல் அதனைப் பற்றிய புரிதலோடு அதை இயக்கத்தைப் பார்த்து அதன் முழுப் பரிமாணத்தையும் அனுபவித்து உணர்ந்து கொள்ளும் போது அது ஏற்படுத்தும் தாக்கம் நிரந்தரமாக இருக்கும். எனவே நமக்குள் உணர்தல் ஏற்பட்டுவிட்டால் அதுவே மிகப்பெரிய உந்துசக்தியாகிவிடும். எனவே மாற்றமானது எளிதில் நடந்துவிடும்.
நான்காவது படியாகிய “தெளிதல்” என்பது ஞானத்தைக் குறிப்பதாகும்.
ஒன்றை மீண்டும் மீண்டும் கற்பனையில் ஆழ்ந்தோ நடைமுறைப் படுத்தியோ நம் அனுபவம் முழுமையானதாகும். இத்தகைய தெளிவு ஏற்படும் போது யானை நமக்கு யானையாகவே தெரியும். அப்படியில்லாமல் ஒருமுறை உணர்ந்த நிலையிலோ (அ) புரிந்த நிலையிலோ (அ) அறிந்து கொண்ட நிலையிலோ நின்றுவிட்டால் யானையின் சில பகுதிகளை மட்டும் பார்த்தவர்களாக இருப்போம். அதுமட்டுமல்ல... வாழ்நாள் முழுவதும் அந்தப் பகுதி மட்டுமே யானை என்றும் அடம் பிடிப்போம். முழுமையைக் காணும் முயற்சியின்றி உண்மையை உணராமலே வாழ்ந்து முடித்துவிடக் கூடும்.
முழுமைபெறாத இத்தகைய நிலையில் மாற்றங்கள் நிகழ்வதில்லை. திருவள்ளுவர், புத்தர், விவேகானந்தர், ஏசுநாதர், நபிகள்நாயகம் போன்ற சான்றோர்களும் காந்தி, ஆப்ரகாம்லிங்கன், மார்டின் லூதர்கிங், காரல் மார்க்ஸ், லெனின், சர்ச்சில் போன்ற உலகம் போற்றும் அரசியல் தலைவர்களும், தாகூர், பாரதியார், வேர்ட்ஸ் வொர்த், ஷெல்லி, கீட்ஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா போன்ற இலக்கிய – தத்துவஞானிகளும், ஐன்ஸ்டீன், நியூட்டன், எடிசன், ஆர்க்கிமிடிஸ், சர்.சி.வி.ராமன், மேரிகியூரி, இராமானுஜம் போன்ற அறிவியல் – கணித மேதைகளும் கொலம்பஸ், வாஸ்கோட காமா போன்ற புவியியல் கண்டுப்பிடிப்பாளர்களும். ஹென்றி போர்டு, ஜி.டி நாயுடு போன்ற தொழில்நுட்ப வர்த்தக மேதைகளும் இத்தகைய தெளிவைப் பெற்றிருந்தார்கள். இன்றும் சிலர் இந்நிலையை (தெளிவு பெற்ற நிலையை) அடைந்திருக்கிறார்கள் என்றாலும் நம்மில் பலர் அறிந்தும், ஆனால் புரியாமலும், புரிந்தும் ஆனால் உணராமலும், உணர்ந்தும் ஆனால் தெளிவு பெறாமலும் பல்வேறு நிலைகளில் இருந்து வருகிறார்கள். எல்லோருமே உயர்ந்த நிலையாகிய தெளிவினை அடைய வேண்டும். அப்போதுதான் மாற்றங்கள் உடனுக்குடன் நிகழும்! உன்னதம் நிலை பெறும்! இந்த நான்கு நிலைகளும் ஒருவரை அறியாமையிலிருந்து ஞானத்தை நோக்கி இட்டுச் செல்வதற்கான நான்கு படிக்கட்டுகள். இதனை உணர்வோம், தெளிவோம், ஏற்றமிகு மாற்றத்தை விரைவில் காண்போம்!
- தேவகோட்டை ம.திருவள்ளுவர் (நமது நம்பிக்கை)
வேலை இழப்பு - உங்கள் செயல்திறனை உங்களுக்கே நினைவூட்டக் கிடைத்த நல்வாய்ப்பு ...!
உலகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறிபோகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்த நிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென் படவில்லை.அலுவலர் அல்லது ஊழியரின் செயல்திறன் நன்றாகவே இருந்தாலும், தொழில்சூழல் சரியாக இல்லாத போது வேலையை விட்டு விலக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஆகிவிட்ட சூழலில், வேலையை இழக்க நேரும் தனிமனிதர்கள் இந்தச் சூழலை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம்? யாருக்காவது வேலை போனால், உடனடியாக என்ன செய்யலாம்? இந்தக் கேள்விக்கு, உலக அளவில் மனிதவள மேம்பாட்டு நிறுவனர்கள் விடையளித்து வருகிறார்கள். வேலைவாய்ப்பு ஆலோசகர் மார்தா ஃபின்னே இது குறித்து ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார். அவரது வழிகாட்டுதல்கள் சிலவற்றை உள்வாங்கிக் கொண்டு, இந்தியச் சூழலில் சில ஆலோசனைகள் இங்கே தரப்படுகின்றன.
ஒரு வேளை – உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாருக்காவது இப்படியொரு சூழல் ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு இந்தக் கட்டுரை பயன்படக்கூடும். இந்தக் கட்டுரைக்கான அவசியம் உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ ஏற்படக்கூடாது என்கிற பிரார்த்தனையுடன் இந்தக் கட்டுரையை வெளியிடுகிறோம்.
- மரபின்மைந்தன் ம முத்தையா (ஆசிரியர் நமது நம்பிக்கை)
1. வேலை நீக்கம் குறித்த அறிக்கை, முன்னறிவிப்பின்றி தரப்படுகிற சூழலில் உடனடியாக அதில் கையெழுத்திடாதீர்கள். உங்கள் வேலை இழப்பிற்கு ஓரளவேனும் நியாயமான இழப்பீடு வழங்கப்படுகிறதா என்பதை உறுதிசெய்து கொண்டு, இருக்கிற சூழலில் இதைவிட நல்ல தொகை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிந்தால் மட்டுமே கையெழுத்திடுங்கள்.
2. பதட்டம் காரணமாக, நிர்வாகத்திடமோ, மேலதிகாரியிடமோ கடுமையாக மோதாதீர்கள். வேறு வழியின்றி நிறுவனம் இந்த முடிவை மேற்கொள்கிறது. நாளை சூழ்நிலை மாறலாம். உங்களுக்கு அவர்களும், அவர்களுக்கு நீங்களும் தேவைப்படலாம்.
3. விஷயத்தைக் கேட்டதும் கண்ணீர் வருகிறதா? மான அவமானம் பார்க்காமல் அழுதுவிடுங்கள். உங்கள் மன அழுத்தம் கண்ணீர் வழியே கரைந்தோடும். உங்கள் உடல் நலனுக்கும், அடுத்த கட்ட முடிவுகளை நோக்கித் தெளிவாக நகரவும் இது உங்களுக்குத் துணை செய்யும்.
4. வருமானத்திற்கு நல்ல வழியை நோக்கி சில ஏற்பாடுகளை செய்துகொள்ள மூன்று மாதங்களாவது ஆகும். எனவே சிக்கனமாக இருக்கப் பழகுங்கள். வேலை இருந்தாலும் இழந்தாலும் சிக்கனம் நல்லதுதான்.
5. வங்கி முதலீடுகளை ஒழுங்குபடுத்தி, வட்டித் தொகை சமச்சீராக வருகிறதா என்று பாருங்கள். வேறு வழியே இல்லாமல் போனாலே ஒழிய சொத்துகளைக் குறைந்த விலைக்கு அவசரப்பட்டு விற்காதீர்கள்.
6. உங்கள் தொழில் திறமை – அனுபவம் போன்றவற்றை, ஒரே நிறுவனத்திற்கு என்றில்லாமல் பல நிறுவனங்களுக்கும் பயன்படும் விதமாக ஆலோசகர் பொறுப்பேற்க முயலுங்கள். உங்களுக்குப் பல ஆயிரங்கள் சம்பளம் கொடுத்த நிறுவனத்திற்குக் கூட சில ஆயிரங்கள் பெற்றுக் கொண்டு பகுதிநேரப் பணிபுரியும் சூழல் அடுத்த சில மாதங்களில் உருவாகலாம்.
7. உண்மை நிலையை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். மாற்று வழிகளை அவர்களுடன் கலந்து ஆலோசியுங்கள். குழந்தைகளுக்கு என்ன வயதோ அதற்கேற்ப விஷயத்தைப் பக்குவமாகச் சொல்லுங்கள். பதறாதீர்கள். பதட்டமடையச் செய்யாதீர்கள்.
8. கோவையில் மேட்டுப்பாளையம் – சிறுமுகை பக்கங்களில் பல தொழில் முனைவோர்கள் குறுகிய காலங்களில் தோன்றி, கடின உழைப்பால் முன்னேறி இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். அந்தப் பகுதிகளில் இருந்த பல நிறுவனங்கள் திடீரென்று மூடப்பட்டதால், பெரும் பின்னடைவைச் சந்தித்து, சொந்த முயற்சியில் தாங்களே நிறுவனங்கள் தொடங்கி வளர்ந்தார்கள் அவர்கள். எனவே, இருட்டிலிருந்து மீண்டு வெற்றியின் வெளிச்சத்தைத் தொடும் வாய்ப்பை வாழ்க்கையே வழங்கும் என்பதை நம்புங்கள்.
9. பதட்டத்திலும் பயத்திலும் பெருமளவு சக்தி வீணாகிறது. அதை ஆக்கபூர்வமான சக்தியாக மடைமாற்றம் செய்யுங்கள். “அடுத்தது என்ன” என்கிற கேள்வியையும் தேடலையும் உங்களுக்குள்ளேயே தீவிரமாக்குங்கள்.
10. நிறுவனத்திலிருந்து வெளியேறும்போது கோப்புகள் – விவரணைகளை எடுத்து வர முயலாதீர்கள். ஆனால் நிறுவனம் வழியே நீங்கள் ஏற்படுத்திக் கொண்ட தனிப்பட்ட தொடர்புகளை கைவிட்டுவிடாதீர்கள். உங்கள் புதிய தொழிலுக்கு அந்தத் தொடர்புகள் பெருமளவில் துணை செய்யும்.
11. உலகையே உலுக்கும் பொருளாதாரப் பின்னடைவிற்கு நீங்கள் எவ்விதத்திலும் காரணமில்லை. வேலை இழக்க நேர்ந்தது உங்கள் குறைபாட்டால் இல்லை என்பதை உணருங்கள். அதே நேரம், அடுத்தொரு நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் வாய்ப்புக் கிடைத்தால் உங்களை அங்கே தவிர்க்க முடியாதவராக நிலைநிறுத்தும் அளவு உங்கள் செயல்திறனைக் கூர்மைப்படுத்துங்கள்.
12. எத்தனை மோசமான பின்னடைவுகளிலும் முனைப்புள்ளவர்கள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பின்னடைவு, உங்கள் செயல்திறனை உங்களுக்கே நினைவூட்டக் கிடைத்த நல்வாய்ப்பு என்பதை மனதில் கொண்டு முன்னைவிடவும் முனைப்போடும் நம்பிக்கையோடும், இந்தப் புதிருக்கான விடையைக் கண்டடையுங்கள்.
ஒரு சீரான ஓட்டத்துக்குக் கொண்டு வர முடியவில்லையே என்ற ஒருவிதமான வலியுடன் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் !
அன்றாட அற்புதங்கள்
"அவனா, சமாளிக்கவே தெரியாத ஆசாமிப்பா. நல்ல நிலைமையில இருக்கான். கைநிறைய அத்தியாவசியம் மற்றும் ஆடம்பரத்துக்குப் போதுமான மாச சம்பளம். அவன் அப்படி ஒன்றும் செலவாளியுமில்ல. இருந்தும் பாரேன், எப்பவுமே சிரமதசையில இருக்கான். காசைச் சரியா செலவழிக்கத் தெரியாதவன்னு தான் சொல்லணும். புதுப்பேண்ட் போட்டா பழைய சட்டை போடறான். டை புதுசுன்னா ஷு பார்க்க சகிக்கல்ல. சம்பளப்பணம் எப்படிப் போகுதுன்னே தெரியல்லன்றான். அவன் சம்பாத்தியத்துல பாதி எனக்கு இருந்தாப் போதும். சூப்பரா பட்ஜெட் போட்டு எத்தன அருமையா வாழ்வேன், தெரியுமா", என்று நாம் என்னவோ, அப்படியே வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவதைப் போல, பந்தாவாக நம்மில் பலர் ஏதோ ஒரு சமயத்தில் அலட்டுகிறோம்.
நாம் எல்லோருமே ஏதோ நிதியமைச்சர் என்ற சுகமான கற்பனை நம் மனதில். வரவுசெலவுத் திட்டத்தில் என்னை மிஞ்ச யாருண்டு என்ற ஒரு சுய போதை! அந்தக் கணத்தில் அது ஒரு சகமான சிந்தனையாகவே இருக்கிறது. நாளிதழ்களைப் பாருங்கள். பக்கம் பக்கமாய், செலவுக் கணக்கும் அதுதரும் வசதிகளுமான அறிவுரைகள். கண்ணைச் சுண்டும் விளம்பரங்களும் பேட்டிகளுமாய். இவ்வகையான செய்திகள் படிப்போரை ஈர்க்கவே செய்கின்றன. சமீபத்தில் ஒரு செய்தித் தாளில் கிளம்பியது ஒரு விவாதம். கட்டுரையில், "எண்பது ரூபாயில் ஒரு வாரத்துக்கு வாழ்வது எப்படி?" ஆனால், "ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரத்துக்கு எப்படி 'வாழ்வது'?", என்பது போன்ற எந்தக் கட்டுரையையும் நான் கண்டதில்லை. இருந்தாலும், 'டைம் ஈஸ் மனி' என்று சொல்கிறார்களே. காலம் என்பது பணத்தைவிட அதிக மதிப்பு வாய்ந்தது என்பது என்னவோ உண்மைதான். பொதுவாகவே, கையில் நேரம் இருந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்பது எல்லோராலும் ஒத்துக் கொள்ளக் கூடியது. ஆனால், உங்களிடம் கோடிக்கணக்கில் பணமிருந்தாலும் எனக்கு இருக்கும் அதே அளவிலான மணித்துணிகள் தான் உங்களிடமும் இருக்கும். ஒரு பூனையிடமும் கூட அதே இருபத்துநான்கு மணிநேரம் தான் இருக்கும்.
தத்துவவாதிகள் 'வெளி'யை விவரித்திருக்கிறார்கள். ஆனால், காலத்தை விவரித்ததுண்டா? காலம் தான் எல்லாவற்றுக்குமான கச்சாப் பொருள். ஆதிமூலம் அல்லது லோகமூலம் அது. அதைக் கொண்டு எதையுமே சாத்தியப் படுத்தலாம். நேர உற்பத்தி என்பதுதான் இந்த யுகத்தில் நடக்கக்கூடிய மிகப்பெரிய அற்புதம் என்றால் அது மிகையில்லை. ஒரு ஆச்சரியகரமான சம்பவமாகவும் அது இருக்கக்கூடும்! காலையில் எழுந்து கொண்டதுமே உங்களின் பணப்பையில், அற்புதமான இருபத்துநான்கு மணிநேரம் நிரம்பியிருக்கிறது! அம் மணித்துளிகள் யாவுமே, உங்களுக்கே, உங்களுக்கு மட்டுமே உரியது. அவைதான் ஒருவர் உரிமை கொண்டாடக்கூடிய மிகவும் மகத்தான சொத்து. அந்தச் சொத்தினை உங்களிடமிருந்து யாரும் அபகரிக்க முடியாது; திருட முடியாது. உங்களை விட அதிகமாகவோ குறைவாகவோ வேறு யாரிடமும் இருக்கவும் இருக்காது.
ஒரு மகத்தான மக்களாட்சியில், காலம் எனும் பெரும்சக்தியின் முன், செல்வத்தின் அதிகாரங்களோ, அறிவின் அதிகாரங்களோ செல்லுபடியாகுமா! அறிவாளிகளுக்கு ஒரு நாளைக்கு கூடுதலாக ஒரு மணிநேரம் கிடைக்கிறதா? இல்லையே. இந்த மதிப்புமிகுந்த நேரத்தை கவனமுடன் கணக்குபோட்டுச் செலவிட்டுப் பாருங்கள். அதன்பலன் முழுக்க முழுக்க உங்களுக்கே உரித்தானதாகிவிடும். "இவன் முட்டாள் இல்லை. வெகுளியும் இல்லை. இவனுக்கு இனிமேல் 'நேரம்' வேண்டாம். இவனுக்குரிய நேரத்தை இனி வெட்டி விடுவோம்", என்று எந்த ஒரு மர்மசக்தியும் போடமுடியுமா கத்தி? நேரம் கொடுக்கும் பலம் ஞாயிறுகளால் தடைபடாது. எதிர்காலத்தை இப்போதே செலவிடமுடியாது. ஆகவே, கடன் தொல்லையும் இல்லை! நிகழ்காலத்தை வேண்டுமானால் வீணடிக்கலாம். நாளையை வீணடிக்க முடியாது. அது உங்களுக்காகக் காத்திருக்கும். அடுத்த மணித்தியாலத்தையும் வீணாக்க முடியாது. அதுவும் உங்களுக்கென்று காத்திருக்கும்.
இதெல்லாம் அற்புதம்தான்! இல்லையா? நாள்தோறும் இந்த இருபத்துநான்கு மணிநேரத்திலேயே வாழ்ந்து கழிக்க வேண்டியதான இவ்வாழ்க்கையே ஓர் அற்புதம்தான்! அதற்குள்ளாகவே ஆரோக்கியத்தை, கேளிக்கையை, பணத்தை, சொத்தை, கௌரவத்தை மட்டுமின்றி, ஆன்மிக பரிணாமத்தையெல்லாம் தேடிச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. காலத்தின் சரியான முறையான பயன்பாடு மட்டுமே மகத்தான பலன்களைக் கொடுக்க முடியும். எல்லாமே அதில்தான் அடங்கியிருக்கிறது. நண்பர்களே, உங்களின் மகிழ்ச்சியும் நீங்கள் பற்றியிருக்கும் அவ்வரிய பரிசுகளும் கூட அதில்தான் அடங்கியிருக்கின்றன! அதைச் சார்ந்தேதான் இருக்கின்றன.
நவீனமும் சாதுர்யமும் கொண்ட நாளிதழ்கள் என்றுமே 'கொடுக்கப்பட்ட நேரத்துக்குள் எப்படி வாழ்வது' என்று சொல்வதே இல்லை என்பது எத்தனை விநோதம்! பணம் கிடைப்பது காலம் கிடைப்பதை விட மிகச் சுலபம். ஆழமாகச் சிந்தித்தோமானல், பணம் என்பதுதான் ஆகச் சுலபமாகக் கிடைக்கக் கூடியது என்று ஒருவரால் புரிந்து கொள்ள முடியும். 'காலம்' பூமியின் மேல் மலைகளெனக் குமிந்து பாரமேற்றியபடியிருக்கிறது.
ஒரு குறிப்பிட்ட அளவிலான பணத்தில் ஒருவரால் வாழ முடியாத நிலையில் அவர் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்க நினைக்கிறார். அதற்காகத் திருடவும் கூடச் செய்கிறார். வருடத்திற்குப் பத்தாயிரம் ரூபாயில் வாழ முடியாததால் வாழ்க்கையை ஒருவர் குழப்பிக் கொள்வதில்லை. எப்படியேனும் சமாளிக்கத்தான் செய்கிறார். ஆனால், இருபத்துநான்கு மணிநேரம் கையிலிருக்கும் ஒருவர் சரிவரச் செலவிடப் போதுமானதாக இல்லையென்றால் அவர் தன் வாழ்க்கையை நிச்சயம் குழப்பிக்கொள்ளத்தான் செய்கிறார்!
நிற்காமல் தொடர்ந்து வரவிலேயே இருந்திடும் இந்த 'காலம்' இரக்கமே இல்லாத கட்டுப்பாட்டையும் கொண்டது.
நம்மில் யார் இருபத்துநான்கு மணிநேரமும் 'வாழ்கிறோம்'? 'வாழ்கிறோம்' என்றால் 'இருக்கிறோம்' என்பதல்ல! 'சமாளிக்கிறோம்' என்பதும் அல்ல!
காலத்தைச் சரியாகச் செலவிடவில்லை, என்ற ஒருவித அசௌகரியமான குற்றவுணர்வு இல்லாமல் எத்தனை பேர் நம்மிடையே இருக்கிறோம்! நம்மில் எத்தனை பேருக்கு பழைய பேண்டுக்கு புதிய சட்டை அல்லது பழைய சட்டைக்குப் புதிய பேண்ட் என்ற விநோதம் இல்லாமல் எப்போதுமே ஒரே சீரான வாழ்க்கை நடக்கிறது! "இன்னும் கொஞ்சம் கூட நேரமிருந்தால் நானும்கூட மாற்றங்கள் கொணர்வேன்", என்று நம்மில் எத்தனை பேர் அடிக்கடி சொல்லிக் கொள்கிறோம்! பல காலமாகவே சொல்லி வந்திருக்கிறோம்!...
நமக்கு இதற்கு மேல் நேரம் கிடையாது. அன்றும் இன்றும் நாளையும் என்றுமே இதேபோல இருபத்துநான்கு மணித்தியாலங்களே இருக்கும். எப்போதுமே அலட்சியப் படுத்தப்பட்டிருக்கும் இந்த முக்கியக் கூற்றினை உணர்தலே மிகமிக முக்கியம். இந்தக் கூற்றினை நான் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. சிந்தித்து உணர்ந்தேன். அவ்வளவு தான். இவ்வுண்மையை உணர்ந்த பிறகு தான் நான் தினசரி நேரம் செலவிடும் நுட்பமான செயல்முறைப் பரிசோதனையை மேற்கொண்டேன்.
"ஆனா, எதற்கு இருபத்துநான்கு மணி நேரத்தைப் பற்றியே சொல்லிக் கொண்டிருக்கிறான் இவன்? இருபத்துநான்கு மணிநேரமும் வாழ்வதில் எனக்கொன்றும் பிரச்சனையில்லையே. நான் செய்யத் திட்டமிடுவதையெல்லாம் செய்கிறேன். அதே நேரத்தில் சில போட்டிகளுக்கும் போக முடிகிறது என்னால். இதெல்லாம் சின்ன விஷயம். ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் மட்டும் தான் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டு திருப்திப்பட்டாப் போச்சு. இதற்குப்போய்..." என்று முக்கிய செய்தியை விட்டுவிட்டு ஒரு சிலர் இதைச் சாதாரணமாகக் கூட நினைக்கலாம்.
ஐயா, என்னை மன்னியுங்கள். உங்களைப் போன்ற ஒருவரைத்தான் நாற்பது ஆண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தேன். உங்களின் முகவரி, தொலைபேசி எண் எல்லாவற்றையும் அவசியம் கொடுங்கள். வாழ்க்கையில் அப்படி எப்படி உங்களால் திருப்திப்பட்டுக் கொண்டிருக்க முடிகிறது என்று தெரிந்துகொள்ள எனக்கும் ஆசை. விரிவாக எனக்குச் சொல்ல என்ன கட்டணம் என்றும் சொல்லி விடுங்கள். நான் உங்களிடம் பேசுவதை விட நீங்கள்தான் என்னிடம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். முன்னால் வாருங்கள். நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் என்பதில் எனக்கு ஒருவித சந்தேகமுமில்லை. ஆனால், இங்கே ஏராளமான பாவப்பட்ட ஆன்மாக்கள் வருடங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உருண்டோடுவதைப் பார்த்தபடியே இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கையை ஒரு சீரான ஓட்டத்துக்குக் கொண்டு வர முடியவில்லையே என்ற ஒருவிதமான வலியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் என்முன்னால் வரும்வரை நான் இவர்களுடனேயே பேசிக் கொண்டிருக்க வேண்டியதாக இருக்கிறது.
அவ்வுணர்வைப் பற்றி நாம் விரிவாக யோசித்தால் மேலும் நன்றாகப் புரியும். ஒரு வித அசௌகரியமும், எதிர்பார்ப்பும், ஏமாற்றமும், முன்னோக்கிய அகப்பார்வையும் ஊக்கமும் கலந்த ஓர் உணவு அது. தீராத தொடர் சௌகரியத்தை ஏற்படுத்தக் கூடியது. அது. நமது அனைத்து மகிழ்ச்சிகளையும் தின்று, கோரமாக இளிக்கும் ஓர் எலும்புக்கூடு போலச் செயலாற்றும். திரையரங்கத்திற்குப் போய் நாம் சிரித்து மகிழ்வோம். ஆனால், அது தனது தீனமான ஒரு விரலைச்சுட்டி நம்மைக் குற்றம் சாட்டும். நாம் கிடுகிடுவென்று கடைசி ரயிலைப் பிடிக்க ஓடுவோம். அங்கே தளமேடையில் ரயிலுக்குக் காத்திருக்கும் போதும் நம்மை விடாது பின்தொடர்ந்து, "உன் இளமையை எல்லாம் என்னப்பா செஞ்ச? இந்த வயசுல நீ இப்ப என்ன செஞ்சிகிட்டிருக்க?" என்று கேட்டுத் துளைக்கும். இவ்வகையான உணர்வுகள் வாழ்க்கையில் சகஜம் என்றும் அத்துடன்தான் வாழ்ந்து தீர்க்க வேண்டும் என்றும் நீங்கள் நினைக்கலாம் உண்மை!
ஆனால், ஒவ்வொரு செயலுக்கும் பல்வேறு கட்டங்கள் உண்டு. ஒருவருக்கு மெக்காவுக்குப் போய்வரும் ஆசை இருக்கலாம். மெக்காவுக்குப் போகவேண்டும் என்று இடைவிடாது அவரின் மனசாட்சி சொல்லிக் கொண்டிருக்கும். சுற்றுப்பயண அலுவலகத்தின் துணையுடனோ சுயமாகவோ ஒருமுறை மட்டுமே முயன்றால் போதாது. அதற்குப் பல்வேறுகட்ட முயற்சிகள் தேவையாக இருக்கிறது. நினைத்த மாதிரியே மெக்காவுக்குப் போய்ச் சேரவும் சேரலாம். செங்கடலை எட்டும் முன்னரே அவர் இறக்கவும் இறக்கலாம். அவரது ஆசையோ நிறைவேறாமலே இருக்கும். ஆனால், மெக்காவுக்குப் போக நினைக்கும் அவர் தன்னுடைய ஊரைவிட்டே கிளம்பாமல் இருப்பதுதான் பெரும்பாலும் நடக்கும் வேடிக்கை.
நம் ஊரைவிட்டே கிளம்புவதில்லை நாம். பக்கத்தில் இருக்கும் சுற்றுலாப் பயண அலுவலகத்திற்குப் போய் சுற்றுப்பயண விவரங்களைக் கூடக் கேட்பதில்லை. நமக்கு இருக்கும் காரணம் என்ன தெரியுமா? அதைக் காரணம் என்றுகூடச் சொல்ல முடியாது. சால்ஜாப்பு என்றோ சப்பைக்கட்டு என்றோ தான் சொல்ல வேண்டும். ஒரு நாளைக்கு இருபத்துநான்கு மணிநேரம் மட்டுமே இருக்கிறது என்பதுதான் அந்த ஒரே அங்கலாய்ப்பு.
நாம் நமது தெளிவற்ற குறிக்கோளை ஆழ்ந்து ஆராய்ந்தால் அது, அந்தச் சோம்பேறி மடம் கட்டிய கதை, சால்ஜாப்பு கிளம்பிய வேர் நமக்குப் புலப்படும். அதாவது, அதைச் செய்ய வேண்டும் என்ற குறிப்பிட்ட யோசனையில் ஆரம்பித்திருக்கிறது. நம்மிடையே படிந்துள்ள யோசனைகளைக் கடந்தும் நாம் ஏதேனும் செய்யவேண்டும். காலம் காலமாக நம்மில் படிந்திருக்கும் வாழ்க்கைக்கு வேண்டியதைச் சம்பாதிப்பது, சௌகரியங்களைத் தேடுவது, கடன்களை அடைப்பது, சேமிப்பது, சொத்துக்களையும் வாய்ப்புக்களையும் பெருக்குவது, மற்றும் அதற்கு வேண்டிய முயற்சிகள். என்பதுபோன்ற எழுதப் பட்டதும் படாததுமான விதிகள் எல்லாமே, மாற்றியெழுதப் படாமல் இருக்கின்றன. இந்த வேலைகள் கடினமானவை தான்! நம்மில் வெகு சிலரே சாதித்திடும் வேலைகள்! நம்மை மீறியவையாகத் தோற்றம் காட்டும் வேலைகள்! இருந்தும், நாம் அவற்றில் வென்றாலும் தோற்றாலும் மேற்கூறிய 'எலும்புக்கூடு' மட்டும், அனுபவப் பாடம் என்கிறாப்போல. நம்முடனேயே இருக்கும்.
நம் திறனையும் மீறிய செயல் என்று நமக்குத் தெரிந்தாலும். நம் சக்தியால் முடியாதவை என்று தெரிந்திருந்தாலும், நாம் எளிதில் திருப்தியடையக் கூடாது. செலவிட்டுக் குறைந்து போயிருக்கும் நமது சக்திக்கு மேலும் கொஞ்சம் செய்ய வேண்டியிருக்கிறது.
ஆமாம், இது சத்தியம். எல்லோரையும் போல தினசரி செயல் திட்டங்களைக் கடந்தும் ஏதேனும் சாதிக்கும் ஆசை வாழ்க்கையில் குறிப்பிட்ட கட்டத்தைக் கடந்தவர் அனைவருக்குமே வரும்.
அந்த ஆசையை நிறைவேற்றிடும் முயற்சியை மேற்கொள்ளும்வரை மேற்கூறிய அசௌகரியமான காத்திருப்பு இருக்கும். அது நம் ஆன்மாவின் அமைதியைக் குலைத்தபடியே இருக்கும். அந்த ஆசைக்கு எண்ணற்ற பெயர்கள் உண்டு. அறிவுத்தேடல் எனும் பிரபஞ்ச ஆசை என்பது அவற்றில் ஒன்று. இந்த ஆசை மிகவும் உறுதியானது. எந்த அளவிற்குத் தெரியுமா? வழக்கமான தினசரி வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் இந்த ஆசையால் உந்தப்பட்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறவும், அறிவை மேலும் அதிகமாகத் தேடவும் நினைக்கிறார்கள். ஹர்பெர்ட் ஸ்பென்ஸர் உலகிலேயே மகத்தான மனம் கொண்டவர் என்றறியப்படுபவர். அவரே இந்த ஆசைக்குள் அடிக்கடி விழுந்தபடியிருந்தார்.
வழக்கமான திட்டமிட்டதுபோன்ற வாழ்க்கையைக் கடந்தும் வாழ ஆசைப்படும், இந்த ஆசைகுறித்த புரிதல் இருக்கும் நிறைய ஆசாமிகள் பெரும்பாலும் அறிவுப்பசி கொண்டவர்கள். அவர்கள் நிறைய வாசிக்கவும் தெரிந்துகொள்ளவும் விரும்புகிறார்கள். இவர்கள் இலக்கிய ஆர்வம் மிகுந்தவர்களாகவும் உருவாகிறார்கள். ஆனால், இலக்கியம் மட்டுமே அறிவுலகைத் தன்னுள் அடக்கியதல்ல என்பதை நான் இங்கே சொல்லியே ஆகவேண்டும். இலக்கியத்தைக் கடந்து அப்பாலும் சுயமுன்னேற்றத்துக்கான, அறிவுப்பசியைத் தீர்க்கும் ஓர் உலகம் விரிகிறது. அவற்றைப்பற்றி நான் பிறகு விரிவாகச் சொல்வேன். இலக்கிய ஈடுபாடு இல்லாதவர்களுக்கு இங்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்ளவிழைகிறேன்.
அறிவுதாகத்தைத் தீர்க்க இலக்கியக் கிணறு மட்டும் தான் உதவும் என்று நீங்கள் நினைத்துக்கொள்ள வேண்டாம்!
அன்றாட வாழ்வில் ஒருவித அதிருப்தி மற்றும் அசௌகரியத்துடனேயே வாழ்ந்து வருகிறீர்கள், அதற்கு முக்கியக் காரணம் தினமும் செய்ய நினைக்கும் பணிகளில் பலவற்றை முடிக்காமல் விடுகிறீர்கள், அதிக நேரமிருக்கும் போது அவற்றைச் செய்ய நினைக்கிறீர்கள், என்றெல்லாம் உங்களை நம்ப வைத்தாயிற்று. இந்நிலையில் இப்போது, 'அதிக நேரம்' என்றைக்கும் கிடைக்காது எனும் முகத்தில் அறையும் உண்மை உங்களின் முன்னால் இருக்கிறது! உங்களுக்குரிய நேரம் உங்களிடம்தான் இருக்கிறதே. இப்போது வேலையை அரைகுறையாக விட்டுவிட்டதால் ஏற்படும் அந்த அசௌகரிய ஏமாற்ற உணர்வை உதறித் தள்ளிவிடுவது எப்படி என்ற ரகசியத்தை உங்களுக்குச் சொல்லட்டுமா?
மிக அற்புதமான ரகசியம் அது. அதை நான் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியான எந்த எதிர்பார்ப்பும் என்னில் இல்லை. வேறு யாரும் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையும் கூட எனக்கில்லை. இன்னும் அது கண்டுபிடிக்கப் படவேயில்லை! இதுவரை நான் சென்னதைக் கேட்டதில் உங்களுக்குள் செத்துக்கிடந்த நம்பிக்கையில் ஒருவித உயிர்ப்பை உணர்ந்திருப்பீர்கள். ஒருவேளை நீங்கள், இத்தனை நாளாக நான் என் சலிப்பையும் அலுப்பையும் விரட்டவென்று தேடித்தேடித் தோற்றுப்போன நேரத்தில் இந்த மனுசன் எனக்கு ஒரு சுலப வழியைச் சொல்லப் போகிறான்" என்று கூட நினைத்திருக்கலாம். அடடா... ஆனால் அந்த மாதிரியான எந்த எளிய அல்லது சுலப வழியும் இல்லையே. மெக்காவுக்கான பாதை அங்கே போய்ச் சேருவோமா இல்லையா என்றே உறுதியாகத் தெரியாதபடி கரடுமுரடாகவும் கடினமாகவும் தானே இருக்கிறது.
ஒருவர் முழுமையாக வாழ ஆசைப்பட்டு தன் வாழ்வைச் சீர்படுத்த முயற்சிக்கும்போது மிக முக்கியமாக கவனத்தில்கொள்ள வேண்டியது இதில் இருக்கக்கூடிய சவாலைத்தான். தியாகங்களும் முடிவற்ற முயற்சிகளும் கொண்ட இந்த வேலை மிகவும் சவாலானது என்ற புரிதல்மட்டும் முதலில் இருந்து விட்டால் நமக்குள் வரக்கூடிய ஓர் அமைதி மிக இன்றியமையாதது. இதை மேலும் அதிகம் அழுத்திச் சொல்லவும் என்னால் முடியாது.
ஒரு காகிதத்தில் பேனாவைக் கொண்டு உங்களின் கால அட்டவணையை முறைப்படுத்திக் கொண்டு உங்களின் குறிக்கோளை அடைய நினைத்தால் ஏமாந்துதான் போவீர்கள். அந்த யோசனையே வேணாம். ஊக்கக் குறைவுகளுக்கும் மாயைகளுக்கும் நீங்கள் நிச்சயம் தயாராகவே இருக்க வேண்டும். பெரிய முயற்சியில் கிடைக்கும் சிறிய பலனில் அதிருப்தியடையாதவர்களும் இதனால் பலனடைய முடியாது. ஆகவே அத்தகையோர் பேசாமல் நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல உங்களின் 'இருத்தல்' மட்டும் தொடரட்டும். சும்மா இருத்தலே சுகம்.
மிகவும் மனச்சோர்வும் சுவாரஸ்யமின்மையும் கொண்ட அந்தநிலைதான் எத்தனை வருத்தத்திற்கு உரியது? இருந்தாலும், அதுவும் பரவாயில்லை என்றே நான் சொல்வேன். ஏனெனில், இந்தவித இருத்தலில் இருந்து இருந்து, பின்னர் அதைக் கடந்துதான் சொந்தச் செயல் திட்டத்தையையும் மிஞ்சிச் சாதிக்கும் ஆர்வமே வரும். ஆகவே, மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்திடும் இந்த 'இருத்தல்' எனக்கும் பிடிக்கும்.
"சரி, நான் போருக்குத் தயார் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் சொன்னதையெல்லாம் யோசித்து விட்டேன். நான் எப்போது ஆரம்பிக்கலாம்?", என்று நீங்கள் கேட்டீர்களானால், "உடனே! இப்பவே!" என்பதுதான் என் பதில். இதை ஆரம்பிக்க எந்த மந்திரமோ மாயமோ கிடையாது. குளத்து நீர் மிகவும் குளிர்கிறது என்று நீரில் குதிக்காமல் நீச்சல்குளத்தின் கரையிலேயே நின்று கொண்டிருப்பவனுக்கு எப்படி நீச்சல் பயில முடியும்? முதலில் நீருக்குள் இறங்க வேண்டும். பிறகு தான் சில முயற்சிகள் மேற்கொண்டு நீந்தக் கற்கலாம்.
நான் முன்பே சொன்னதுபோல காலத்தின் தொடர்வரவு என்பது எப்போதுமே அழகுதான். அதை நாம் முன்பே செலவிட முடியாது. அடுத்த ஆண்டை, அடுத்த நாளை, ஏன் அடுத்த மணிநேரத்தை நாம் முன்பே செலவிட முடியுமா? ஆனால், அது எதிர்காலத்தில் துல்லியமாக, குறைவற்று, வீணாகாமல், செலவாகாமல் உறுதியாக நமக்காகக் காத்திருக்கும். ஒவ்வொரு மணிநேரமும் நீங்கள் திருந்த நினைத்தால் திருந்தலாம். வேறு எதுவுமே உங்களுக்காகத் தயாராக அடுத்த வாரத்திலோ நாளைக்கோ காத்திருக்காது. நீச்சல்குளத்தின் நீர் அடுத்த வாரம் வெதுவெதுப்பாக இருக்காது. எப்படி இருக்குமோ தெரியாது. சொல்லப் போனால், இன்னும் அதிகக் குளிராகக்கூட ஆகலாம்.
ஆனால், நீங்கள் ஆரம்பிக்கும் முன்னர், உங்கள் காதில் சில சொற்களை நான் ரகசியமாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.
மிக முக்கியமாக உங்களின் சொந்த உற்சாகத்திற்கு எதிரான எச்சரிக்கை இது. நல்லது செய்ய நினைக்கும்போது ஏற்படக்கூடிய ஊக்கம், மிகவும் சூது நிறைந்ததும் வழிதவறக் கூடியதுமானது. அது திடீரென்று செயல் ஒழுங்குகளுக்காக அலறும். அதன் வெறியை முதலில் உங்களால் தீர்க்க முடியாது. மேலும் மேலும் அதிகமான செயல்களைக் கேட்கும் அது. மலைகளையும் ஆறுகளையும் தகர்க்க நினைக்கும். வியர்வை ஆறாகப் பெருகும் வரை திருப்தி அடையாது அது. அதற்குப் பிறகு அடிக்கடி புருவத்தின் மேல் துளிர்க்கும் வியர்வையை உணர்ந்து, "போதும்டா சாமி", என்று சலிப்பாகக்கூட ஓரிரு வார்த்தைகள் பேசும் முன்னரே சடாரென்று களைத்து இறந்துபோகும்.
ஆரம்பத்தில் உற்சாக மிகுதியால் ஒரேயடியாக உங்கள் சக்திக்கு மீறி செயல்படாதீர்கள். குறைவாகச் செயல்பட்டு நிறைவு காணுங்கள். விபத்துக்களை சகஜமாக ஏற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் இருக்கக் கூடிய மனித இயல்புக்கு, சுபாவத்துக்கு இடம் கொடுங்கள்.
சுயமதிப்பிற்கும் தன்னம்பிக்கைக்கும் அதிக சேதாரமில்லாத அளவில் ஒன்றிரண்டு தோல்விகள் ஏற்படுவதில் ஒரு பிரச்சனையுமில்லை. ஆனால், ஒரு தோல்வியை விட இன்னொரு தோல்வியோ, ஒரு வெற்றியை விட இன்னொரு வெற்றியோ பெரியதில்லை. உருப்படாமல் போனவர்களில் பெரும்பான்மையினர் அளவிற்கு அதிகமாக முயற்சித்தவர்கள்தான்! துவக்கத்தில் ஏற்படும் தோல்விகள்தான் ஊக்கத்தை அழிக்கக் கூடியது. ஆகவே, இருபத்துநான்கு மணிநேரத்திற்குள் நிறைவாகவும் முழுமையாகவும் சௌகரியமாகவும் வாழ நினைக்கும்போது உடனடியாக நேரக்கூடிய தோல்விகளைத் தவிர்த்தல் மிகவும் நல்லது.
சின்ன வெற்றியைவிட பெரிய தோல்வியே மேல் எனும் பெருவியாபாரிகளின் தத்துவத்தில் எனக்குக் கொஞ்சமும் உடன்பாடில்லை. சின்னச் சின்னத் தோல்விகளில் எனக்கு மிகுந்த உடன்பாடு உண்டு. பெரிய தோல்வி எங்குமே நம்மை இட்டுச் செல்லாது. ஆனால், கண்டிப்பாகச் சின்ன வெற்றியானது பெரிய வெற்றிக்கு தான் நம்மை இட்டுச் செல்லும்.
ஆகவே, ஒரு நாளில் இருக்கும் கால அளவைக் கணக்கெடுப்போம். உங்களின் நாள் முழுவதும் இடைவெளியே இல்லாது நிரம்பியிருக்கிறது என்கிறீர்களா? எப்படி? நீங்கள் உங்கள் வாழ்க்கையை எவ்வளவு செலவிடுகிறீர்கள்? சராசரியாக ஏழு மணிநேரம் செலவிடுவீர்களா? உங்களின் தூக்கத்துக்கு ஏழு மணிநேரம் செலவாகிறதா? சரி, நான் தாராளமாகவே இன்னும் இரண்டு மணிநேரத்தைக் கூட்டிக் கொள்கிறேன். இந்தக் கணத்தில், உங்களிடம் மீதியிருக்கும் எட்டு மணிநேரத்துக்கு நீங்கள் கணக்கு காட்டுங்கள் என்று நான் உங்களைக் கேட்கிறேன்!
நேரத்தைச் செலவிடும் உயரிய யுத்தி கைவரப் பெறவேண்டுமானால் செய்யக் கூடியவை என்ன? இதற்கு நான் குறிப்பிட்ட ஓர் உதாரணத்தை முன்னிருத்தித் தான் பேசவேண்டியிருக்கிறது. உண்மையில் சராசரி ஆள் என்ற ஒருவர் இருக்க முடியாது. ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அவனளவில் சிறப்பானவன். நாம் பார்க்கப் போவது ஒரே ஒரு சராசரி உதாரணம் தான். ஆனாலும், அது ஒன்றே போதுமானதாக இருக்கிறது. பத்து முதல் ஆறு மணி வரை அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெருநகரவாசியை எடுத்துக் கொள்வோம். காலையும் மாலையும் வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் இடையேயான இவர் பயணத்திற்கு பதினைந்து நிமிடம் செலவிடுகிறார். இதை விட அதிகநேரம் வேலையிலும் பயணத்திலும் செலவிடுவோரும் இருக்கிறார்கள். அதே போல குறைவாகச் செலவிடுவோரும் இருக்கிறார்கள். ஆனால், நாம் சராசரியைக் குறித்துப் பேசுகிறோம்.
இருத்தலின் பொருளாதாரக் கோணம் இப்போது நமக்குத் தேவையில்லாத ஒன்று. நம்மைப் பொறுத்தவரை வாரத்துக்கு ஓராயிரம் ரூபாய் சம்பாதிக்கும் ஒரு குமாஸ்தாவும் ஒரு கோடிஸ்வரன் அளவிற்கு சௌகரியமாகவே வாழ்கிறார்.
இப்போது இந்த உதாரண மனிதன் செய்யும் ஒரே பெரிய தவறு என்ன என்று பார்த்தோமானால், அவன் தன் வேலையை வெறுப்பதில்லை. ஆனால், அதேசமயம் ஈடுபாட்டுடன் செய்வதில்லை. பெரும்பாலான நேரங்களில் ஒருவருக்கு (மேற்கூறிய உதாரண மனிதர்) தன் பணியிலோ வியாபாரத்திலோ ஆழ்ந்த ஈடுபாடு இருக்காது. அவருக்கு வெறுப்பு ஏற்படவில்லை என்பதே சின்ன ஓர் ஆறுதல். வேலையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தாமதமாகத் துவங்கி அரைமனதோடு இயங்குவார். மிகவும் மகிழ்ச்சியுடன் சீக்கிரமே வேலை நாளை முடித்துக் கிளம்புவார். வேலையில் இருக்கும்போது அவரின் இயங்கு சக்தி அதன் முழுத்திறனோடு இருப்பது அரிதுதான். (என்னிடம் கோபம் கொள்ளும் வாசகர்கள் என்னைக் குற்றம் சாட்டுவார்கள். ஆனாலும், இந்த நம்பிக்கையை நான் மாற்றிக்கொள்ளப் போவதில்லை).
இருந்தும் இந்த மனிதர் தொடர்ந்து பத்திலிருந்து ஆறு வரையிலான நேரத்தைத்தான் தனது முக்கிய 'நாள்' எனக் கொள்கிறார். அதற்குப் பிறகும் அதற்கு முன்பும் இருக்கும் காலத்தை முன்னுரையாகவும் பின்னுரையாகவும் கொள்கிறார். இவ்வகையான மனோபாவம் அவர் அறியாமல் அனிச்சையாகவே அவரில் இருக்கிறது. அந்த மணித்தியாலங்களில் அவருடைய ஈடுபாடு சுத்தமாக அழிந்து போய்விடுகிறது. அதன் காரணமாக, அந்த நேரத்தை அவர் வீணாக்கா விட்டாலும் அவற்றைக் கவனத்தில் கொள்வதில்லை. மணித்துளிகளை எண்ணுவதுமில்லை. அதை வெறும் விளிம்பாக எண்ணிக் கொள்கிறார்.
"ஏதோ ஓடுது சார். இன்னிக்குப் பாடு ஓடினாச் சரின்னு இருக்கு வேற என்ன", என்று நாட்களை வெறுமே 'ஓட்டும்' இந்த மனோபாவாம் மிகவும் அபத்தமானதும் ஆரோக்கியமற்றதுமாகும். ஏனெனில், ஒரு குறிப்பிட்ட கால அளவிற்கும் அதற்குள் அடங்கியிருக்கும் சில நடவடிக்கைகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவர் தன் வாழ்க்கையின் மூன்றில் ஒரு பகுதியை இப்படியே கடத்தினால் 'வாழ' முடியுமா? நிச்சயம் முடியாது. வெறுமனே 'இருக்க'த் தான் முடியும்.
நமது உதாரண மனிதர் முழுமையாக வாழ நினைக்கிறார். அப்படி நினைக்கும் அவர் முதலில் அவரின் ஒரு நாளுக்குள் இன்னொரு நாளைத் திட்டமிட வேண்டும். இதுதான் முக்கிய சூட்சமம். ஒரு டப்பாவுக்குள் இருக்கும் சீனப்பெட்டியைப் போல. நாளுக்குள் இருக்கும் இந்த நாள் மாலை ஆறு மணிக்குத் துவங்கி அடுத்த நாள் காலை பத்து மணிவரைக்கும் நீளும். அந்த நேரத்தில் உடலையும் ஆன்மாவையும் நட்புவட்டத்தையும் வளர்ப்பதைத் தவிர பதினாறு மணிநேரம் இருக்கும் இந்த ஒரு நாளில் அந்த ஒவ்வொரு மணிநேரத்திலும் அவருக்குச் செய்ய ஒன்றுமே இல்லை. அப்போது அவர் மிகவும் வேலையற்றிருக்கிறார். ஆகவே, சம்பளம் இல்லை. லௌகீகங்களில் ஈடுபடாமல் சுயவேலையில் இருக்கும் ஒருவரைப் போல நிம்மதியாக இருக்கிறார். இது தான் அவரின் மனோபாவம். இந்த மனோபாவம் மிகவும் முக்கியமானதும் கூட. பெரிய அளவில் பதிவுவரி செலுத்தி வாங்கும் அவரின் பெருநிலத்தின் பெருமானத்தைவிடவும். அந்த மனிதரின் வாழ்க்கையில் கிடைக்கும் வெற்றி இந்த மனோபாவத்தில் தான் அடங்குகிறது.
என்ன? அந்த பதினாறு மணிநேரத்தில் செலவிடும் நேரமும் சக்தியும் வேலையின் எட்டு மணிநேரத்தின் வேலைத்தரத்தைக் குறைக்கும் என்கிறீர்களா? அப்படியில்லை. மாறாக, வேலைத்தரத்தைக் கூட்டத்தான் உதவும். கால்கைகளைப் போலில்லை மூளை. மூளையின் செயற்திறன் தொடர்ந்து செயலாற்றும் ஆற்றல் பெற்றது என்பதை நீங்கள் முதலில் நம்ப வேண்டியது. மூளைக்குத் தேவையானதெல்லாம் மாற்றம் தான். தூக்கம் தவிர வேறு ஓய்வு அதற்கு இல்லை.
காலையில் படுக்கையை விட்டு எழுந்து கொண்டதிலிருந்து கையில் உங்களுக்கு உங்களுக்கே உரியதான பதினாறு மணிநேரத்தை எப்படிச் சரியாகச் செலவிடலாம் என்று ஆராய்வோம். நீங்கள் செய்து கொண்டிருப்பதையும் நீங்கள் செய்ய வேண்டியதையும் மட்டுமே நான் இப்போது சொல்லப் போகிறேன். வாழ்விடங்களை உருவாக்கும் நோக்கில் அழிக்கப் பட்ட மரங்களை மறுநடவு செய்யும் விதத்தில் நேரத்தை எப்படி ஆங்காங்கே நடுவது என்பதைக் குறித்து நான், அப்புறம்தான் பேசபோகிறேன்.
9.10க்கு வீட்டை விட்டுக் கிளம்பும் முன்னர் நமது உதாரண மனிதர் ஒவ்வொரு நொடியையும் வீணாக்குகிறார் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். பெரும்பான்மையான வீடுகளின் இம்மனிதர் 9.00 மணிக்கு எழுந்து 9.10க்குள் தயாராகி அவசரமாகப் பசியாறி ஓடுகிறார். ஆனால், வாயிற் கதவை விட்டு வெளியேறிய நொடியிலிருந்து அவரின் மூளை கிட்டத்தட்ட செயலிழந்து போகிறது. அது 'கோமா'வில் விழுகிறது.
ரயில் நிலையத்தில் ரயிலுக்குக் காத்திருக்கும் போது கொஞ்சம் நேரம் வீணாகிறது. இப்படித் தளமேடையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடியே நூற்றுக்கணக்கான நாட்கள் பணத்தால் ஈடுகட்ட முடியாத நேரத்தை வீணாக்குகிறார். ரயில்வே போக்குவரத்துத் துறை எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் கவனித்துக் கொண்டிருக்கிறது. உதாரண மனிதர் நூற்றாயிரக்கணக்கான மணிநேரங்களை கொஞ்சமும் யோசிக்காமல் வீணடிக்கிறார். உண்மையில் இதைத் தடுக்க அவருக்கு எந்தவித முன்னெச்சரிக்கையும் தோன்றவில்லை.
அவர் கையில் இருக்கும் நேரம் ஒரு முழு ஐநூறு ரூபாய்த் தாள் என்று வைத்துக் கொள்வோம். அதைச் சில்லறையாக மாற்றிக் கொள்வதுதான் அவருடைய முதல் வேலை. அப்படி சில்லறையாக மாற்றும்போது அவர் நிறைய சில்லறைகளைச் சிந்தி வீணாக்குகிறார்.
சில்லறை கொடுப்பவர் உதாரண மனிதரிடம், "உங்களுக்கு சில்லறை கொடுக்கிறேன். ஆனால், மூன்று சதவீதம் கட்டணம் வசூலிப்போம்", என்று சொன்னால் நமது உதாரண மனிதன் ஆச்சரியப் படுவானோ? இருக்கலாம். ஆனால், இதைத் தான் ரயில்வே போக்குவரத்துத் துறை இவனிடம் செய்கிறது. அதுவும் தினமும் இரண்டு முறை.
மிகச் சில்லறை விஷயத்தைக் குறித்துப் பேசுகிறேன் என்கிறீர்களா? ஆமாம். ஆனால், இது எப்படி முக்கியத்துவம் பெறுகிறது என்று நான் பிறகு சொல்வேன்.
இப்போது நீங்கள் நாளிதழை வாங்கிக் கொண்டு ரயிலில் ஏறத் தயாரா?
மூலம் : ஆர்னால்ட் பென்னெட்
தமிழில் : ஜெயந்தி சங்கர்


அருமை
ReplyDelete